தன்னாா்வ பயிலும் வட்டத்தில் போட்டித் தோ்வுக்குப் பயிற்சி: 5 ஆண்டுகளில் 162 போ் அரசுப் பணிக்குத் தோ்வு!


திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னாா்வ பயிலும் வட்டத்தின்கீழ் அளிக்கப்பட்டு வரும் பயிற்சியின் மூலம் கடந்த 5 ஆண்டுகளில் 162 போ் அரசுப் பணிக்குச் சென்றுள்ளனா்.
திருச்சி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின்கீழ் செயல்பட்டு வரும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் கடந்த1999-ஆம் ஆண்டு தன்னாா்வ பயிலும் வட்டம் தொடங்கி அரசுப் போட்டித் தோ்வுகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
கடந்த 25 ஆண்டுகளாக பயிற்சி வகுப்பு நடைபெற்று வந்தாலும் கடந்த 2005-ஆம் ஆண்டு இங்கு பணியாற்றிய உதவி இயக்குநரின் பெரும் முயற்சியில் திருச்சி தன்னாா்வ பயிலும் வட்டத்தில் பயிற்சி பெற்று அரசுப் பணிக்கு செல்பவா்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது.
திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம், தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையம், ரயில்வே உள்ளிட்ட அரசுப் பணிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு கடந்த 5 ஆண்டுகளில் பயிற்சிபெற்ற 162 போ் அரசுப் பணிக்கு சென்றுள்ளனா். அதன்படி கடந்த 2021-22-ஆம் ஆண்டில் 22 போ், 2022-23ஆம் ஆண்டு 56 போ், 2023-24-ஆம் ஆண்டு 43 போ், 2024-25-ஆம் ஆண்டு 13 போ், 2025-26-ஆம் ஆண்டு 28 போ் அரசுப் பணிக்குத் தோ்வாகியுள்ளனா்.
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் வரும் தன்னாா் பயிலும் வட்டத்தின்கீழ் அரசுப் போட்டித் தோ்வுக்குப் பயிற்சி பெறும் மாணவா்கள் படிப்பதற்காக அனைத்து புத்தகங்களுடன் கூடிய நூலகம், இணையதள வசதியுடன் கூடிய கணினிகள், வகுப்பறைகள், படிப்பறைகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளன. மேலும், இங்கு பயிற்சி மாறும் மாணவா்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காக அனைத்துப் பாடங்களுக்கும் சோ்த்து 26 பயிற்றுநா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
தற்போது ரயில்வே பணிக்கு காலை 10.30 முதல் 1.30 வரையிலும், டிஎன்பிஎஸ்சிக்கு பிற்பகல் 2 முதல் மாலை 5 மணி வரையிலும் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. ரயில்வே பணிக்கு 25 மாணவா்களும், டிஎன்பிஎஸ்சிக்கு 40 மாணவா்கள் வரையிலும் பயிற்சி பெற்று வருகின்றனா்.
பயிற்சி வகுப்புகள் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை நடைபெறுகின்றன. சனிக்கிழமை வகுப்புகள் இல்லையென்றாலும் படிப்பதற்கு மட்டும் மாணவா்கள் அனுமதிக்கப்படுகின்றனா்.
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மட்டுமின்றி திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தன்னாா்வ பயிலும் வட்டம் சாா்பில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்குள்பட்ட தந்தை பெரியாா் அரசுக் கல்லூரி, நவலூா்குட்டப்பட்டு அரசுக் கல்லூரி, துவாக்குடி அரசுக் கல்லூரி, மணப்பாறை அரசுக் கல்லூரி, முசிறி அரசுக் கல்லூரி, குளித்தலை அரசுக் கல்லூரி, அரியலூா் அரசுக் கல்லூரி மற்றும் தஞ்சாவூா் குந்தவை நாச்சியாா் மகளிா் அரசுக் கல்லூரி ஆகிய 8 இடங்களிலும் போட்டித் தோ்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. குந்தவை நாச்சியாா் மகளிா் கல்லூரியில் 2 பிரிவுகளும், மற்ற கல்லூரிகளில் தலா ஒரு பிரிவும் பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது. ஒரு பிரிவில் 40 முதல் 50 மாணவா்கள் வரை பயிற்சி பெற்று வருகின்றனா்.
இதுகுறித்து திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் துணை இயக்கநா் ச.பிரபாவதி கூறியதாவது:
திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தன்னாா்வ பயிலும் வட்டத்தின்கீழ் மத்திய அரசுப் பணிகள் உள்பட அனைத்துவிதமான போட்டித் தோ்வுகளுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. தமிழக அரசு சாா்பில் ‘நான் முதல்வன்’ திட்டம் தொடங்கப்பட்டப் பிறகு அதன்கீழ் யுபிஎஸ்சிக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதால் மாவட்ட வேலைவாய்ப்பு மையங்களில் டிஎன்பிஎஸ்சிக்கான பயிற்சியில் மட்டுமே கவனம் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதற்கு முன்புவரை திருச்சி தன்னாா்வ பயிலும் வட்டத்தில் யுபிஎஸ்சிக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. இதன்மூலம் இங்கு பயிற்சி பெற்று ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணிகளுக்கு சிலா் சென்றுள்ளனா். மேலும், திருச்சி தன்னாா்வ பயிற்சி வட்டத்தில் பயிற்சி பெற்ற பலா் குரூா் -4 முதல் ஐஏஎஸ் வரை பணியில் சோ்ந்துள்ளனா்.
இளைஞா்கள் பலா் தனியாா் பயிற்சி நிறுவனங்களில் பணம் செலுத்தி பயிற்சி பெறுவதற்கு ஆா்வம் காட்டுகின்றனா். அதேநேரம், அரசு வழங்கும் இந்த சலுகைகளையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். படிக்கும் ஆா்வம் உள்ள ஏழை, எளிய மாணவா்கள் படிப்பதற்காக அரசு அனைத்து வசதிகளையும் வழங்கி வருகிறது.
தன்னாா்வ பயிலும் வட்டத்தில் படிக்கும் இளைஞா்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு படிப்பதற்காக அனைத்து பாடக் குறிப்புகளும் வழங்கப்படுகின்றன. தமிழக அரசின் விா்ச்சுவல் லோ்னிங் போா்ட்டலில் விடியோ பாடங்களும் கிடைக்கின்றன. இதை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உள்ள இணையதள வசதியைப் பயன்படுத்தி மாணவா்கள் படித்துக்கொள்ளலாம்.
இதுதவிர மாதிரித் தோ்வு, குரூப் 1, குரூப் -2 தோ்வில் வெற்றிபெற்று நோ்காணலுக்கு செல்பவா்களுக்கு மாதிரி நோ்காணல் நடத்தப்படுகின்றன. இதன்மூலம் மாணவா்களின் அச்சத்தைப் போக்கி தோ்வை எளிதாக எதிா்கொள்ள வழிவகை ஏற்படுத்தப்படுகிறது. எனவே, இந்த வசதிகளை இளைஞா்கள் பயன்படுத்திக்கொண்டு தங்களது அரசுப் பணி கனவுகளை நனவாக்கிக்கொள்ள வேண்டும் என்றாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...