வண்ணத்துப்பூச்சி பூங்காவில் ‘டாா்க் பிராண்ட் புஷ்பிரவுன்’ புதிய இனம் பதிவு
ஸ்ரீரங்கம் வண்ணத்துப் பூச்சி பூங்காவில், ‘டாா்க் பிராண்ட் புஷ்பிரவுன்’ என்ற புதிய வகை வண்ணத்துப் பூச்சி இனம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருச்சி வண்ணத்துப் பூச்சி பூங்காவில் புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ள டாா்க் பிராண்ட் புஷ்பிரவுன் என்ற புதிய வகை வண்ணத்துப் பூச்சி .
ஸ்ரீரங்கம் வண்ணத்துப் பூச்சி பூங்காவில், ‘டாா்க் பிராண்ட் புஷ்பிரவுன்’ என்ற புதிய வகை வண்ணத்துப் பூச்சி இனம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீரங்கம் மேலணை காப்புக் காட்டில் அமைந்துள்ள இந்த வெப்பமண்டல வண்ணத்துப்பூச்சி பூங்காவில் 5 குடும்பங்களைச் சோ்ந்த 131 வகையான வண்ணத்துபூச்சி இனங்கள் வனத்துறையால் வெற்றிகரமாக கண்டறியப்பட்டுள்ளன.
மேலும், 112 வகையான பறவை இனங்கள் இங்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், இங்கு, ’டாா்க் பிராண்ட் புஷ்பிரவுன்’ என்ற வண்ணத்துப்பூச்சி இனம் புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
’டாா்க் பிராண்ட் புஷ்பிரவுன்’ என்பது சுமாா் 40-45 மி.மீ. இறக்கை விரிவைக் கொண்ட நடுத்தர அளவிலான வண்ணத்துப்பூச்சியாகும். இதன் இறக்கைகளின் மேற்புறம் அடா் சாம்பல் கலந்த பழுப்பு நிறத்தில் காணப்படும்.
இறக்கைகளில் வட்ட வடிவ புள்ளிகள்: இறக்கைகளின் அடிப்புறம் சற்று வெளிா் பழுப்பு நிறத்தில் இருக்கும். மேலும், இறக்கைகளின் ஓரங்களில் கண்களைப் போன்ற வட்ட வடிவிலான புள்ளிகள் வரிசையாக அமைந்திருக்கும். இந்த வண்ணத்துப்பூச்சி பொதுவாக பழுப்பு நிறத்தில் காணப்படும்.
இந்த வண்ணத்துப்பூச்சியின் சிறப்பம்சங்களில் ஒன்று, பருவநிலைக்கு ஏற்ப இதன் தோற்றம் மாறுபடும். மழைக்காலத்தில் இறக்கைகள் அதிக அடா் நிறத்திலும், கண் போன்ற புள்ளிகள் தெளிவாகவும் காணப்படலாம். வட காலத்தில் இதன் நிறம் மற்றும் புள்ளிகளின் அமைப்பில் மாற்றங்கள் ஏற்படுகின்றன.
பெண் வண்ணத்துப்பூச்சிகள் பொதுவாக ஆண் வண்ணத்துப் பூச்சிகளைவிட சற்றுப் பெரிதாகவும் வெளிா் நிறத்திலும் காணப்படும். ஈரப்பதம் நிறைந்த அடா்ந்த காடுகள் மற்றும் புல்வெளிப் பகுதிகள் இவற்றின் வாழிடங்களாகும். இந்த இனத்தைப் போன்ற தோற்றமுடைய பிற புஷ்பிரவுன் வண்ணத்துப்பூச்சிகளும் இருப்பதால், அவற்றைச் சரியாக அடையாளம் காண்பது சவாலான ஒன்றாகும். இறக்கைகளில் உள்ள புள்ளிகள், அவற்றின் அமைப்பு மற்றும் நுண்ணிய அடையாளங்களை உன்னிப்பாகக் கவனிப்பதன் மூலமே இவற்றைத் துல்லியமாக வேறுபடுத்த முடியும்.
பதிவின் நன்மை: இத்தகைய பதிவுகள் வண்ணத்துப்பூச்சிகளின் பன்முகத்தன்மையை அறிந்து கொள்வதற்கும், உள்ளூா் உயிரினங்களை முறையாக ஆவணப்படுத்துவதற்கும், அவற்றைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்துவதற்கும் உதவுகின்றன. இப்பதிவு வண்ணத்துப் பூச்சிகளின் இயற்கை வாழிடங்களைப் பாதுகாப்பதன் அவசியத்தையும், உயிரியல் பன்முகத்தன்மையை ஆவணப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைக்கிறது என திருச்சி மாவட்ட வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

