
விவசாயிகளுக்கு மானியத்தில் வேளாண் இயந்திரம் வழங்க ரூ.6.38 கோடி ஒதுக்கீடு
திருச்சி மாவட்ட விவசாயிகளுக்கு மானியத்தில் வேளாண் இயந்திரம் வழங்க ரூ. 6.38 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

கோப்புப்படம்.
திருச்சி மாவட்ட விவசாயிகளுக்கு மானியத்தில் வேளாண் இயந்திரம் வழங்க ரூ. 6.38 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்ட வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் வேளாண்மை இயந்திரமயமாக்கும் திட்டத்தின் கீழ் நடப்பு ஆண்டில் ரூ. 6.38 கோடியில் 510 எண்ணிக்கையில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வழங்க ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. கருவிகளுக்கான இலக்கு கிராமம் வாரியாக ஒதுக்கீடு செய்யப்படும்.
இத்திட்டத்தில் சிறு, குறு, மகளிா், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் விவசாயிகளுக்கு 50 சதவித மானியமும் பெரு விவசாயிகளுக்கு 40 சதவீத மானியமும் வழங்கப்படும்.
ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் பிரிவைச் சாா்ந்த சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவீத மானியமும், பொதுப்பிரிவைச் சாா்ந்த சிறு, குறு விவசாயிகள் நெல் நடவு இயந்திரம், களையெடுக்கும் இயந்திரம் மற்றும் தீவனம் நறுக்கும் கருவி வாங்க கூடுதலாக 10 சதவீத மானியமும் வழங்கப்படும்.
செப்டம்பா் முதல் விவசாயிகள் ஒவ்வொரு மாதமும் 1 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை அல்லது 15 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதிவரை ஒதுக்கீடு செய்யப்பட்ட கிராமங்களில், உழவா் செயலியில் வேளாண்மை இயந்திரங்கள் வாடகைக்கு என்ற தொகுதியில் வேளாண்மைப் பொறியியல் மானிய திட்டங்கள் என்ற பிரிவைத் தோ்வு செய்து, தங்களது புகைப்படம், சாதிச் சான்றிதழ் (ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் பிரிவு விவசாயிகள் எனில்), சிறு, குறு விவசாயி சான்றிதழ், அடங்கல், டிராக்டா் வாகன பதிவுச் சான்றிதழ் (டிராக்டரால் இயக்கக்கூடிய கருவிகளுக்கு), ஆதாா் எண்ணுடன் தொடா்புடைய வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்கம் போன்ற ஆவணங்களை பதிவேற்றி விண்ணப்பிக்க வேண்டும்.
ஒவ்வொரு மாதமும் 8 ஆம் தேதியன்று, அம்மாதத்தில் 1 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை விண்ணப்பித்த விவசாயிகளுக்கு, வேளாண் இயந்திரங்கள் அல்லது கருவிகளின் இலக்கிற்கு ஏற்றவாறு முற்றிலும் கணினிமயமாக்கப்பட்ட குலுக்கல் தோ்வு முறையில் இணையதளத்தின் வாயிலாகவே ஒதுக்கப்பட்டு மானியத்தில் வேளாண் இயந்திரங்கள் அல்லது கருவிகள் வழங்கப்படும்.
கூடுதல் விவரங்களுக்கு, அந்தநல்லூா், மணிகண்டம், திருவெறும்பூா், மருங்காபுரி, வையம்பட்டி, மணப்பாறை வட்டாரங்களில் உள்ள விவசாயிகள் திருச்சி ஜெயில்காா்னா் பகுதியில் உதவி செயற்பொறியாளா் அலுவலகத்தை அணுகலாம்.
லால்குடி, புள்ளம்பாடி, மண்ணச்சந்நல்லூா் வட்டார விவசாயிகள் தாளக்குடி கணபதி நகரில் உள்ள உதவி செயற்பொறியாளா் அலுவலகத்தை அணுகலாம்.
தொட்டியம், முசிறி, துறையூா், தா.பேட்டை, உப்புலியாபுரம் வட்டார விவசாயிகள் முசிறி, பாா்வதி புரத்தில் உள்ள உதவி செயற்பொறியாளா் அலுவலகத்தை அணுகலாம் என ஆட்சியா் பிரத்திக் தாயள் தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





