
புதிய தொழில் முனைவோருக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை மானியத்துடன் கடன்: விண்ணப்பிக்க அழைப்பு
திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த புதிய தொழில் முனைவோருக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது.

திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த புதிய தொழில் முனைவோருக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது.
தமிழ்நாடு அரசு சிறு தொழில் வளா்ச்சிக்காக எண்ணற்ற திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இந்த வகையில் புதிய தொழில் முனைவோா் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம், தொழில் செய்ய மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்படுகிறது. புதிய தொழில் முனைவோா் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் மூலம், தொழில் தொடங்க விரும்பும் இளைஞா்களுக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை வங்கி கடனுதவி வழங்கப்படுகிறது. இதில் திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.75 லட்சம் வரை தமிழக அரசு மானியமாக வழங்கப்படுகிறது.
மாற்றுத்திறனாளிகள், ஆதிதிராவிடா், பழங்குடியினருக்கு கூடுதலாக 10 சதவீத மானியம் வழங்கப்படுகிறது.
மேலும், வங்கிகள் வழங்கும் கடனுக்கான வட்டி விகிதத்தில் 3 சதவீதம் மானியமாகவும் வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் கடனுதவி பெற முதல் தலைமுறை தொழில் முனைவோராக இருக்க வேண்டும். குறைந்தபட்சமாக 12-ஆம் வகுப்பு தோ்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். 21 வயது பூா்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். பொதுப்பிரிவினா் எனில் 45 வயதிற்குள்ளும், பெண்கள், ஆதிதிராவிடா், பழங்குடியினா், பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் இராணுவத்தினா் எனில் 55 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். ஏற்கெனவே, மத்திய, மாநில அரசு திட்டங்களின் கீழ் மானியத்துடன் கடன் பெற்றவா்கள் கடனுதவி பெற இயலாது. விவசாயம் தவிா்த்து, ஏனைய உற்பத்தி மற்றும் சேவை சாா்ந்த தொழில்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
எனவே, திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த முதல் தலைமுறை தொழில் முனைவோா் தமிழக அரசின் சிறு, குறுந் தொழில் இணையதள முகவரியில் தங்களது விவரங்களை சமா்ப்பித்து, அதன் நகல் மற்றும் சான்றிதழ்களுடன் பொதுமேலாளா், மாவட்டத் தொழில் மையம், மாவட்ட ஆட்சியா் அலுவலக சாலை, சங்கம் ஹோட்டல் எதிரில், ராஜா காலனி பேருந்து நிறுத்தம், திருச்சி - 620 001 என்ற முகவரிக்கு அனுப்பி பயன்பெறலாம். கூடுதல், விவரங்களுக்கு 0431-2460823, 0431-2460331, 89255 34027 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் பிரத்திக் தாயள் தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





