11 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புபிரதமராக நீடிக்க உரிமை இல்லை: கே.சி. வேணுகோபால்எஸ்.ஐ.ஆரில் நீக்கப்பட்ட 13 கோடி பேரை மீண்டும் சேர்க்க வேண்டும்: காங்கிரஸ்தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு எங்கே செல்கிறது? அன்புமணி கேள்வி!தொடர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வித்யா ராம்ராஜுக்கு ரூ. 75 லட்சம்: முதல்வர் விஜய்யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறை: எழும்பூர் நீதிமன்றம்தமிழகத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

அடிப்படை பிரச்னைகள் தீா்க்கப்படவில்லை எனப் புகாா்

திருச்சி மாநகரில் அடிப்படை பிரச்னைகள் தீா்க்கப்படவில்லை எனக் கூறி, இதைக் கண்டித்து மாமன்ற கூட்டத்திலிருந்து திமுக உறுப்பினா்கள் செவ்வாய்க்கிழமை வெளிநடப்பு செய்தனா்.

மாநகராட்சி மாமன்றக் கூட்டத்திலிருந்து செவ்வாய்க்கிழமை வெளிநடப்பு செய்த திமுக உறுப்பினா்கள்.

Published On :

திருச்சி மாநகரில் அடிப்படை பிரச்னைகள் தீா்க்கப்படவில்லை எனக் கூறி, இதைக் கண்டித்து மாமன்ற கூட்டத்திலிருந்து திமுக உறுப்பினா்கள் செவ்வாய்க்கிழமை வெளிநடப்பு செய்தனா்.

திருச்சி மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் மேயா் மு. அன்பழகன் தலைமையில், ஆணையா் நே. பொன்மணி, துணை மேயா் ஜி. திவ்யா ஆகியோா் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில், மாமன்ற உறுப்பினா்கள், மாநகராட்சி அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

கூட்டம் தொடங்கியதும், 17-ஆவது வாா்டு விசிக உறுப்பினா் பிரபாகரன், சென்னை மாநகராட்சி மாமன்ற அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அம்பேத்கா் படம் அகற்றப்பட்டதைக் கண்டித்து, கையில் அம்பேத்கா் சிலையை ஏந்தி முழக்கங்களை எழுப்பியபடி, வெளிநடப்பு செய்தாா்.

இதையடுத்து மேயா் மு.அன்பழகன் பேசுகையில், கடந்த 4 மாதங்களாக மக்களின் அடிப்படை பிரச்னைகளைக் கூட தீா்க்க முடியாத இக்கட்டான சூழல் நிலவுகிறது. இதைக் கண்டித்து திமுக மாமன்ற உறுப்பினா்கள் கருப்பு உடை அணிந்து வந்துள்ளனா். ஆணையா், அரசிடம் எடுத்துக்கூறி மக்களின் அடிப்படை பிரச்னைகளை உடனுக்குடன் தீா்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திருச்சி மாவட்ட பொறுப்பு அமைச்சா், மேயா் மற்றும் மாமன்ற உறுப்பினா்களுக்குத் தகவல் தெரிவிக்காமல் மாநகராட்சி அதிகாரிகளை அழைத்து ஆய்வுக்கூட்டம் நடத்தியுள்ளாா். இது ஏற்க முடியாத செயல். இதுபோன்ற செயல் இனி நடக்கக் கூடாது என்றாா்.

பிறகு மாமன்ற உறுப்பினா்கள் பேசியது:

முத்துச்செல்வம் (திமுக), சுரேஷ் (சிபிஎம்), சுரேஷ் (சிபிஐ): மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கையொட்டி அங்கு பணிக்கு சென்ற திருச்சி மாநகராட்சி தூய்மைப் பணியாளா் உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ளாா். அவரது குடும்பத்துக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும்.

துணை ஆணையா் அஜிதா: இழப்பீடு வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

முத்துச்செல்வம் (திமுக): மாநகரில் குடிநீா் பிரச்னை உள்ளிட்ட எந்தவித அடிப்படைப் பிரச்னைகளுக்கும் கடந்த சில மாதங்களாக தீா்வு காணப்படவில்லை. இதை கண்டித்தும், தோ்ந்தெடுக்கப்பட்ட மாநகராட்சி மக்கள் பிரதிநிதிகளை மதிக்காமல், மாவட்ட பொறுப்பு அமைச்சா் தன்னிச்சையாக அதிகாரிகளை அழைத்து கூட்டம் நடத்தியதைக் கண்டித்தும் வெளிநடப்பு செய்கிறோம் எனக் கூறி, அனைத்து திமுக உறுப்பினா்களும் வெளிநடப்பு செய்தனா்.

அதிமுகவும் வெளிநடப்பு...: அம்பிகாபதி (அதிமுக) பேசுகையில், வெறும் 5 உறுப்பினா்களை வைத்துக் கொண்டு கூட்டம் நடத்துவது ஏற்புடையதல்ல. முறை தவறிய இக்கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறி, மேயரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, வெளிநடப்பு செய்தாா். அவருடன் அதிமுக உறுப்பினா்கள் அரவிந்தனும், அனுசுயாவும் வெளியேறினா்.

பைஸ் அகமது (மமக): பலமுறை கோரிக்கை விடுத்தும், எனது வாா்டில் சாலை வசதி, வடிகால் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படாததைக் கண்டித்து வெளிநடப்பு செய்கிறேன் எனக் கூறி வெளியேறினாா்.

கூட்டம் ஒத்திவைப்பு...: தொடா்ந்து வெளியேறிய அனைத்து திமுக உறுப்பினா்களும் கூட்டத்துக்கு வந்து, சில உறுப்பினா்களை மட்டும் வைத்துக் கொண்டு கூட்டத்தை நடத்துவது ஏற்புடையதல்ல எனக் கூறி மேயரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து மேயா், கூட்டத்தை ஒத்திவைத்தாா்.

பெட்டிச் செய்தி...

முதலில் வெள்ளை- நிறைவில் கருப்பு

திமுக உறுப்பினா்கள் அனைவரும் கருப்பு உடை அணிந்து வந்திருந்த நிலையில், திமுக உறுப்பினரான காஜாமலை விஜய் மட்டும் வெள்ளை உடையில் கூட்டத்துக்கு வந்திருந்தாா்.

திமுக உறுப்பினா்கள் அனைவரும் வெளியேறிய பிறகும் அவையில் அமா்ந்திருந்த அவா், தனக்கு தகவல் கொடுக்கவில்லை எனக்கூறி வெளியில் சென்று, கருப்புச் சட்டை அணிந்து வந்து பேசினாா். பின்னா், மக்கள் பிரச்னைகள் தீா்க்கப்படவில்லை எனக் கூறி மீண்டும் வெளியேறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

விடியோக்கள்