கிருஷ்ணகிரி, ஜூலை 28: தென்பெண்ணையாற்றில் தொடரும் மணல் கொள்ளையால், காவேரிப்பட்டணம் அருகேயுள்ள சவுளூர் பாலத்துக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள முக்கிய ஆறுகளில் ஒன்றான தென்பெண்ணை ஆறு, கிருஷ்ணகிரி அணையிலிருந்து மாவட்ட எல்லை வரை சுமார் 35 கி.மீ. நீளம் செல்கிறது. இதனை சார்ந்து ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடைபெறுகிறது.
நீர் வரத்து குறைந்ததால் கொள்ளை!
கடந்த சில ஆண்டுகளாகவே ஆற்றில் நீரின் வரத்து குறைவாக உள்ளது. இதையடுத்து, திம்மாபுரம், காவேரிப்பட்டணம், பென்னேஸ்வர மடம், கொட்டாவூர், சவுளூர், நெடுங்கல், ஆவத்துவாடி, குடிமெனஅள்ளி, பண்ணந்தூர், மஞ்சமேடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சட்ட விரோதமாக மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது.
முன்பு கிராம மக்கள் தங்களுக்குத் தேவையான மணலை எடுத்து வந்தனர். ஆனால், இப்போது மணல் கொள்ளையர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இவர்களிடமிருந்து கிராம மக்களே தங்கள் தேவைக்கு அதிக விலை கொடுத்து மணல் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாம்.
ஆற்றில் 5 அடி வரை பள்ளம்!
மணல் கொள்ளை காரணமாக, ஆற்றில் 5 அடி வரை பள்ளங்கள் காணப்படுகின்றன. ஆற்றில் தொழிலாளர்கள் மூலம் மணல் எடுக்கப்பட்டு, அங்கேயே சலிக்கப்பட்டு, டிராக்டர், மாட்டு வண்டி மற்றும் கழுதைகள் மூலம் மணல் கடத்தப்படுகின்றது.
இவ்வாறு கடத்தப்படும் மணல் தனியார் ஆக்கிரமித்துள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் சேமிக்கப்பட்டு, இரவு நேரங்களில் லாரிகள் மூலம் கர்நாடக மாநிலத்துக்கு கடத்தப்படுகிறது.
முக்கிய பிரமுகர்கள் ஆதரவு?
மணல் கடத்தல் கும்பலுக்கு அரசியல் பிரமுகர்கள், மக்கள் பிரதிநிதிகளின் ஆதரவும் உள்ளது. முக்கிய பிரமுகர்களுக்குச் சொந்தமான வாகனங்களில் மணல் கடத்தப்படுவதால், அரசுத் துறையினரும் நடவடிக்கை எடுக்கத் தயங்குவதாகவும் கூறப்படுகிறது.
வலுவிழந்து வரும் பாலம்
காவேரிப்பட்டணம்-காக்கங்கரை செல்லும் சாலையில் சவுளூர் கிராமத்தின் அருகே சில ஆண்டுகளுக்கு முன் மேம்பாலம் கட்டப்பட்டது. இதனால், தளிஅள்ளி, மலையாண்டஅள்ளி, மலையாண்டஅள்ளி புதூர், பெரியமலை, வேலம்பட்டி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயனடைந்து வருகின்றனர்.
இந்த மேம்பாலத்தின் அருகே மணல் எடுக்க அதிக அளவில் பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளன. மேலும், நாள்தோறும் 5 டன்னுக்கு அதிகமாக மணல் எடுக்கப்பட்டு வருகிறது. இதனால், பாலம் வலுவிழந்து கீழே விழும் நிலையில் உள்ளது.
கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
வழக்கமாக, மணல் கொள்ளை தொடர்பாக வருவாய் மற்றும் காவல் துறையினர் சில வாகனங்களைப் பிடித்து, அபராதமும் விதிக்கின்றனர். ஆனாலும், இது தொடர்கதையாகவே உள்ளது.
விவசாயம், நிலத்தடி நீர் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு, மணல் கொள்ளையைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.