சுற்றுலா தலங்களை மேம்படுத்த கிருஷ்ணகிரியில் சுற்றுலா அலுவலகம் அமையுமா?

கிருஷ்ணகிரி, செப். 27: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களை மேம்படுத்தும் வகையில், சுற்றுலா அலுவலகம் அமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.  இம்மாவட்டத்தில் பெண்ணேற்வர மடம், பாரூர்,
Updated on
1 min read

கிருஷ்ணகிரி, செப். 27: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களை மேம்படுத்தும் வகையில், சுற்றுலா அலுவலகம் அமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

 இம்மாவட்டத்தில் பெண்ணேற்வர மடம், பாரூர், நடசாலை, தீர்த்தம் ஆகிய இடங்களில் உள்ள சிவன் கோயில்கள் வரலாற்று சிறப்பு மிக்கவையாகும். இங்குள்ள தரைக் கோட்டைகள், மலைக் கோட்டைகள் போன்றவை நமது நாட்டின் கலாசாரம், கலைகள், வீரம் ஆகியவற்றை எடுத்துக் காட்டும் வகையில் உள்ளன.

எண்ணற்ற பாறை ஓவியங்கள்!

 மல்லசமுத்திரத்தில் காணப்படும் பெருங்கற்சின்னங்கள் நாட்டில் எங்கும் காண முடியாது என வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 1978-ம் ஆண்டில் மல்லப்பாடியை அடுத்த பீர்பள்ளியில் பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மலை மற்றும் குன்றுகளால் சூழப்பட்டுள்ள இம்மாவட்டத்தில் எங்கும் காணக்கிடைக்காத பாறை ஓவியங்கள் காணப்படுகின்றன. இதோடு, மனிதன் வாழ்ந்த அன்றைய கால எச்சங்களும் அதிகமாக காணப்படுகின்றது.

 தளி, பெட்டமுகுளம், அனிபித்தகள்ளா மலைகள் சிறப்பு வாய்ந்த மலைகளாகும். இங்குள்ள வனப் பகுதிகளில் யானை, கரடி, சிறுத்தைப் புலி, மான் உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டமும் அதிகமாகக் காணப்படுகிறது.

கண்ணை கவரும் கோட்டைகள்!

 கிருஷ்ணகிரியில் உள்ள சையத் பாஷா மலை என்ற கிருஷ்ண தேவராயர் மலையில் காணப்படும் திப்பு சுல்தான் கோட்டை, ஜெகதேவி கோட்டை, குந்தாணி கோயில், கிருஷ்ணகிரி அணை, படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலா பயணிகளின் கண்களை கவரும் வகையில் உள்ளன.

குளிர்ச்சியான சிதோஷ்ண நிலை!

 இதோடு, இம்மாவட்டம் எப்போதும் அதிக வெப்பம் இல்லாமல் குளிர்ச்சியான சிதோஷ்ண நிலை காணப்படும் பகுதியாகும். நாட்டின் எப்பகுதியில் இருந்தும் பயணிகள் வரும் வகையில், 5 தேசிய நெடுஞ்சாலைகள் அமைந்துள்ளன.

 எனவே, இங்குள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களை மேம்படுத்தி, சுற்றுலா தலமாக அறிவிக்க வேண்டும் என்றே இம்மாவட்ட மக்கள் விரும்புகின்றனர்.

 இம்மாவட்டத்தில் உள்ள கிராம மக்களிடம் விளக்கி, அரிய வரலாற்று சின்னங்கள் அழிக்கப்படுவதைத் தவிர்க்கப்படவும் வேண்டும் என்கின்றனர் அவர்கள்.

தொல்லியல் சொர்க்கம்!

 மாநிலத்திலேயே கிருஷ்ணகிரி மாவட்டத்தையே தொல்லியல் சொர்க்கம் என வெளிநாட்டவரும் அழைத்து வருகின்றனர். அவ்வகையில், இம்மாவட்டத்தில் உள்ள முக்கிய பகுதிகளை சுற்றுலா தலங்களாக மேம்படுத்தும் வகையில், சுற்றுலா அலுவலகத்தைத் தொடங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றே மக்கள் விரும்புகின்றனர்.

 இதோடு, கிருஷ்ணகிரி, தளி ஆகிய படகு இல்லங்களில் படகுப் போட்டிகளை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com