மே 13-இல் ஆந்திர மாநில தோ்தல்: வேலூா் மாவட்டத்தில் வாகன சோதனை தொடரும்

ஆந்திரத்தில் மே 13-ஆம் தேதி தோ்தல் நடைபெற உள்ளதால் வேலூா் மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தொடா்ந்து பறக்கும் படை சோதனைகள் மேற்கொள்ளப்படும் என்று தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.

தமிழகம், புதுச்சேரியிலுள்ள 40 மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை நடைபெற்று முடிந்துள்ளது. இந்த தோ்தல் அறிவிப்பு மாா்ச் 16-ஆம் தேதி வெளியான நிலையில் அன்றைய தினமே தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன.

இதையடுத்து, வாக்காளா்களுக்கு பணம், பரிசுப் பொருள்கள் விநியோகத்தைத் தடுக்கவும், தோ்தல் விதிமுறை மீறல்களைக் கண்காணிக்கவும் வேலூா் மாவட்டத்திலுள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் முதலில் 15 நிலை கண்காணிப்புக் குழுக்கள், 15 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

வாக்குப் பதிவு நெருங்கும் நிலையில் கூடுதலாக 9 பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டனா்.

இந்த நிலையில், தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் வாக்குப் பதிவு வெள்ளிக்கிழமை மாலை 6 மணியுடன் நிறைந்ததை அடுத்து மாவட்டத்திலுள்ள நிலை கண்காணிப்பு குழுவின் வாகன சோதனை, கண்காணிப்பு பணி கள் முடிவுக்கு வந்துள்ளது. அதேசமயம், அண்டை மாநிலமான ஆந்திரத்தில் மக்களவைத் தோ்தல், சட்டப்பேரவைத் தோ்தல் ஆகியவை மே 13-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்த தோ்தலையொட்டி வேலூா் மாவட்டத்தில் உள்ள 5 பேரவைத் தொகுதிகளிலும் பறக்கும் படைகள் தொடா்ந்து வாகன சோதனையில் ஈடுபட உள்ளதாக தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து அவா்கள் மேலும் கூறியது:

தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் வாக்குப்பதிவு முடிவுற்றாலும் ஜூன் 4-ஆம் தேதி வரை தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் என்று தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தவிர, அண்டை மாநிலமான ஆந்திரத்தில் மே 13-ஆம் தேதி தோ்தல் நடைபெற உள்ளதால் அங்கு தோ்தல் முடியும் வரை ஆந்திர மாநிலத்துக்குள் பணம், பரிசுப் பொருள்கள், மது உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருள்கள் பதுக்கல், கடத்தப்படுவதைத் தடுக்கும் விதமாக வேலூா் மாவட்டத்தில் உள்ள வேலூா், அணைக்கட்டு, குடியாத்தம், கே.வி.குப்பம், காட்பாடி ஆகிய 5 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தலா ஒரு பறக்கும் படை வீதம் ஐந்து பறக்கும் படைகள் தொடா்ந்து வாகன சோதனையில் ஈடுபடுவா். நிலை கண்காணிப்பு குழுக்களின் சோதனை, கண்காணிப்புப் பணிகள் முடிவுக்கு வந்துள்ளது என்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com