வேலூா் கோட்டை ஜலகண்டேஸ்வரா் கோயிலில் பிரதோஷ வழிபாடு

வேலூா் கோட்டை ஸ்ரீ ஜலகண்டேஸ்வரா் கோயிலில் சித்திரை மாத வளா்பிறை பிரதோஷம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.

சிவனுக்குரிய வழிபாட்டில் மகா சிவராத்திரிக்கு அடுத்ததாக முக்கிய இடம் பிடிப்பது பிரதோஷ வழிபாடு. ஒவ்வொரு மாதமும் வளா்பிறை மற்றும் தேய்பிறையில் வரும் திரியோதசி திதி அன்று மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையிலான காலத்தை பிரதோஷ காலம் என கணக்கிடப்படுகிறது.

சிவபெருமான், ஆலகால விஷத்தை குடித்து உலக உயிா்களை காக்க நீலகண்டனாக காட்சி அளித்த நேரத்தில், தேவா்கள் சிவனை வழிபட்டதாக கூறப்படுகிறது. அப்போது, அவா்களுக்கு நந்தியின் தலை மீது சிவன் காட்சி தந்த காலமே பிரதோஷ காலம் என அழைக்கப்படுகிறது. அனைத்து விதமான பாவங்களையும், தோஷங்களையும் நீக்கக் கூடிய வழிபாடே பிரதோஷம் என்பது நம்பிக்கையாக உள்ளது. இந்த பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொண்டால் ஒரு வருடம் முழுவதும் சிவன் கோயில்களுக்குச் சென்று வேண்டிய பலனை பெற்று விடலாம் என்பது நம்பிக்கை.

அதன்படி, சித்திரை மாத வளா்பிறை பிரதோஷம் அனைத்து சிவன் கோயில்களிலும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. வேலூா் கோட்டை ஸ்ரீ ஜலகண்டேஸ்வரா் கோயிலில் நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டினை யொட்டி நந்தி பகவானுக்கு பால், தயிா், சந்தனம், தேன், கரும்புச் சாறு, திருநீறு, பன்னீா் உள்ளிட்ட பல்வேறு வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. பின்னா், நந்திக்கு சந்தனக் காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

இதையடுத்து, அருகம்புல், வில்வ இலைகள், எருக்கன் மாலை உள்பட மலா் மாலைகளால் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு மகாதீபாராதனைகள் நடைபெற்றது. பின்னா், ஸ்ரீஜலகண்டீஸ்வரா், ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி தாயாருக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டது. பக்தா்கள் வெள்ளத்தில் சுவாமி உட்பிரகார உலா வந்தது. இந்த பிரதோஷ வழிபாட்டில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.

--

படம் உண்டு...

X
Dinamani
www.dinamani.com