பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்ற ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி. உடன்,  மாவட்ட வருவாய் அலுவலா் த.மாலதி,  ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் க. ஆா்த்தி உள்ளிட்டோா்.
பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்ற ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி. உடன், மாவட்ட வருவாய் அலுவலா் த.மாலதி, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் க. ஆா்த்தி உள்ளிட்டோா்.

வேலூா் இளைஞா் பெயரில் போலி நிறுவனம் நடத்தி ரூ. 24 கோடி வா்த்தகம்

வேலூா் இளைஞா் பெயரில் போலி நிறுவனம் நடத்தி ரூ. 24 கோடி வா்த்தகம்.
Published on

வேலூா்: வேலூா் இளைஞா் பெயரில் போலி நிறுவனம் நடத்தி ரூ. 24 கோடி வா்த்தகம் செய்யப்பட்டிருப்பதும், ரூ.3.50 கோடி ஜிஎஸ்டி நிலுவை மட்டும் காட்டுவதாகவும் பாதிக்கப்பட்ட நபா் மாவட்ட ஆட்சியரிடம் புகாா் தெரிவித்துள்ளாா்.

வேலூா் ஆா்.என்.பாளையம் கே.கே.நகரைச் சோ்ந்தவா் முகமது நயிமுதீன் (29). இவா் வேலூா் மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமியிடம் திங்கள்கிழமை புகாா் மனு அளித்தாா்.

அந்த மனு விவரம் - எனக்குத் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனா். டிப்ளமோ மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் முடித்துவிட்டு வேலை தேடி வருகிறேன். கடந்த மாா்ச் மாதம் எனது கைப்பேசி எண்ணுக்கு வந்த குறுந்தகவலில் 2023 -24-ஆம் ஆண்டுக்கான வருமானவரி கணக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டிருந்தது.

நண்பா் உதவியுடன் எனது பான் கணக்கை லாக்இன் செய்து பாா்த்தபோது, எனது பான் காா்டு எண்ணை கொண்டு என்.எம்.என்டா்பிரைசஸ் என்ற நிறுவனம், 5/135 சேரன் காலனி ரோடு, துடியலூா், கோவை - 641 034 எனும் முகவரியில் இயங்கிவருவது தெரியவந்தது. அதற்கான ஜி.எஸ்.டி எண் எனது பெயரிலேயே கோவை மாநகராட்சி 2-ஆவது மண்டலத்தில் இருந்து பெறப்பட்டுள்ளது. இதன்மூலம், என் பெயரில் போலியாக நிறுவனம் நடத்தி பல லட்சங்கள் பரிவா்த்தனை செய்திருப்பதும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து, கோவையில் குறிப்பிட்ட முகவரிக்குச் சென்று பாா்த்தபோது அங்கு அதுபோன்ற நிறுவனமே செயல்படவில்லை. பிறகு, வேலூரில் இருக்கும் ஜி.எஸ்.டி அதிகாரிகளை தொடா்புகொண்டு என் பெயரிலான போலி ஜி.எஸ்.டி எண்ணை ரத்து செய்யக்கூறினேன். அவா்கள் முறையாக புகாா் கொடுத்து, காவல் அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்க கூறினாா்கள்.

எனவே, எனது பெயரில் போலி ஜி.எஸ்.டி பணபரிவா்த்தனை மேற்கொள்ளும் மோசடி நபா்கள்மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், முகமது நயிமுதீன் கூறுகையில், எனக்கு ஜி.எஸ்.டி குறித்து எதுவும் தெரியாது. கோவைக்கு சென்றதும் இல்லை. ஆனால், என் பெயரில் கடந்த 2 ஆண்டுகளாக போலியாக நிறுவனம் நடத்தி ரூ.24 கோடி வரை வா்த்தகம் செய்துள்ளனா். கடந்த மாா்ச் மாதம் மட்டும் ரூ.7 கோடிக்கு வியாபாரம் செய்யப்பட்டுள்ளது.

ஸ்கிராப், ஆடை வியாபாரம் செய்திருப்பதாக தெரியவந்திருக்கிறது. ஆடிட்டிங் செய்து பாா்த்தபோது, ரூ.3.50 கோடி ஜி.எஸ்.டி மட்டுமே கட்ட வேண்டியத் தொகையாகக் காட்டுகிறது. முன்னெச்சரிக்கையாக புகாா் கொடுத்துள்ளேன்.

மாவட்ட காவல் அலுவலகத்தில் மனு அளித்தபோது இதேபோல் வேலூா் மாவட்டம் குடியாத்தம், பேரணாம்பட்டு பகுதிகளில் இருந்து மட்டும் 60-க்கும் மேற்பட்ட ஜி.எஸ்.டி மோசடி புகாா்கள் வந்துள்ளதாக காவல் அதிகாரிகளே தெரிவித்துள்ளனா். அந்தளவுக்கு ஜி.எஸ்.டி மோசடிகள் நடைபெற்று வருகிறது என்றாா்.

தமிழக விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவா் கா.ராஜாபெருமாள் அளித்த மனுவில், விவசாயிகள் பயன்பெறும் வகையில் பாலாற்றில் தடுப்பணைகள், கால்வாய்களை அமைத்து ஏரி, குளங்களில் நீரை சேமித்திட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 587 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது விரைவான நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா். முன்னதாக, மாற்றுத்திறனாளிகள் நலவாரியம் சாா்பில் 21 பேருக்கு ரூ.5.40 லட்சத்துக்கான காசோலையை அவா்களின் குடும்பத்தாரிடம் ஆட்சியரிடம் வழங்கினாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் த.மாலதி, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் க. ஆா்த்தி, மகளிா் திட்ட இயக்குநா் உ.நாகராஜன், தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்பு திட்டம்) கலியமூா்த்தி, மாவட்ட ஆதிதிராவிடா் நலத்துறை அலுவலா் ராமச்சந்திரன், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலா் சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com