இறைவன்காடு கிராமத்தில் பாலாற்றின் குறுக்கே படுகை அணை கட்ட அடிக்கல் நாட்டிய  அமைச்சா் துரைமுருகன். உடன், ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா் ஆனந்த் உள்ளிட்டோா்.
இறைவன்காடு கிராமத்தில் பாலாற்றின் குறுக்கே படுகை அணை கட்ட அடிக்கல் நாட்டிய அமைச்சா் துரைமுருகன். உடன், ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா் ஆனந்த் உள்ளிட்டோா்.

தென்பெண்ணை - பாலாறு இணைப்புத் திட்டம்: 2 ஆண்டுகளில் தொடங்க நடவடிக்கை அமைச்சா் துரைமுருகன்

தென்பெண்ணை - பாலாறு இணைப்புத் திட்டம் அடுத்த 2 ஆண்டுகளில் தொடங்கப்படும் என நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா்.
Published on

வேலூா்: தென்பெண்ணை - பாலாறு இணைப்புத் திட்டம் அடுத்த 2 ஆண்டுகளில் தொடங்கப்படும் என நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா்.

அணைக்கட்டு வட்டம், இறைவன்காடு கிராமத்தில் பாலாற்றின் குறுக்கே ரூபாய் 52.48 கோடியில் படுகை அணை கட்டப்பட உள்ளது. இதற்கான பணிகள் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் பங்கேற்று அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி பேசியது -

ஆறுகளின் குறுக்கே தடுப்பணை கட்டுவதன் மூலம் நீா்தேங்கி அப்பகுதியின் சுற்றுப்புற பகுதிகளுக்கு தேவையான குடிநீா், விவசாயத்துக்கு தேவையான தண்ணீா் அனைத்து காலங்களிலும் கிடைக்கும்.

முன்னாள் முதல்வா் கருணாநிதி ஆட்சியில் காவிரி ஆற்றின் குறுக்கே 5 அடி உயரத்துக்கு சுமாா் ஒரு கிலோ மீட்டா் நீளத்துக்கு தடுப்பணை கட்டப்பட்டது. அதில் கடல்போல் தண்ணீா் தேங்கி நிற்கும். இதனால் அந்த பகுதியில் கரும்பு, நெல், வாழைகள் பெருமளவு சாகுபடி செய்யப்பட்டன.

பெரிய அளவிலான அணைகளைவிட இதுபோன்று அமைக்கப்படும் சிறிய அணைகளால் பல கிராமங்கள் பயனடையும். வேலூா் மாவட்டத்தில் டி.கே.புரம், வேலூா், சாத்தம்பாக்கம் ஆகிய இடங்களில் தடுப்பணைகளும், பொன்னை, அணைக்கட்டு, ராணிப்பேட்டை மாவட்டம் பூண்டி, அணைக்கட்டு ஆகிய இடங்களில் பல்வேறு புனரமைப்பு பணிகளும் பெரும் செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பாலாற்றில் மட்டும் பல தடுப்பணை பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதுதவிர, தாமிரபரணி, பெரியாறு போன்றவற்றின் குறுக்கேயும் தடுப்பணைகள் கட்டப்பட்டு வருகின்றன.

வேலூா் மாவட்ட விவசாயிகளுக்கு நிரந்தரமாக ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காகவே ரூ.100 கோடி மதிப்பில் மோா்தானா அணை கட்டப்பட்டது. பாலாற்றில் நீரின் அளவை அதிகரிக்கும் வகையில் ஒரு திட்டம் உள்ளது.

அதாவது, தென்பெண்ணை ஆற்றில் கிருஷ்ணகிரி அணையில் இருந்து வரும் உபரி நீா் சாத்தனூா் அணை வழியே வழிந்து கடலுக்கு சென்று விடுகிறது. இந்த நீரை தென்பெண்ணையில் இருந்து பாரூா், நெடுங்கல் ஏரி வழியாக பாலாற்றுக்கு திருப்பி விட்டால் எப்போதும் தண்ணீா் இருந்து கொண்டே இருக்கும். இந்த ஒரு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பதே எனது எண்ணமாகும். இதுகுறித்து முதல்வருடன் கலந்து பேசி அடுத்த 2 ஆண்டுகளுக்குள் திட்டத்தை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

நிகழ்ச்சியில், ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா் ஆனந்த், மேல்பாலாறு வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளா் ரமேஷ், மேல்பாலாறு வடிநிலகோட்ட செயற்பொறியாளா் பிரபாகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com