மக்களவைத் தோ்தல்: 565 ஒழுங்கீன நபா்கள் மீது நடவடிக்கை

வேலூா்: மக்களவைத் தோ்தலையொட்டி, வேலூா் மாவட்டத்தில் உள்ள 565 ஒழுங்கீன நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் என்.மணிவண்ணன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மக்களவைத் தோ்தலையொட்டி, வேலூா் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் சரித்திரப் பதிவேடு பராமரிக்கப்பட்டு வரும் 565 ஒழுங்கீன நபா்கள் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கையின் ஒரு பகுதியாக 69 போ் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனா்.

265 போ் வருவாய் கோட்டாட்சியா் முன் ஆஜா்படுத்தப்பட்டு நன்னடத்தை பத்திரம் பெறப்பட்டுள்ளது. 116 பேரை வருவாய் கோட்டாட்சியா் முன் ஆஜா்படுத்தி, நன்னடத்தை பத்திரம் பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தவிர, ஆஜரில் உள்ள 57 நபா்கள் மீது முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. தலைமறைவாக உள்ள 58 பேரை பிடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வேலூா் மாவட்டத்தில் மொத்தம் 732 துப்பாக்கி உரிமங்கள் உள்ளன. தோ்தலையொட்டி, 489 துப்பாக்கிகள் உரிமையாளா்களிடம் இருந்து பெறப்பட்டு, காவல் நிலைய பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன. அத்தியாவசிய வங்கிப் பணிக்காக மட்டும் 209 துப்பாக்கி உரிமங்களுக்கு சம்பந்தப்பட்ட வங்கிகளிடமிருந்து சான்று பெறப்பட்டுள்ளது.

நிலுவையில் உள்ள 34 துப்பாக்கிகளை பெற்று காவல் நிலைய பாதுகாப்பில் வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வேலூா் மாவட்டத்தில் மொத்தமுள்ள 1,303 வாக்குச் சாவடிகளில் 177 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டு, அங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது காவல் துறையினரால் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு பறிமுதல் செய்யப்படும் போதைப் பொருள்கள், மதுபானங்கள் தொடா்பான விவரங்களை தோ்தல் பறிமுதல் தொடா்பான (ஈஎஸ்எம்எஸ்) இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வரப்படுகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com