
நாட்டு வெடிகுண்டு தயாரித்த போது வெடித்து விவசாயி பலத்த காயம்; துப்பாக்கிச் சூடு என நாடகம் - 18 குண்டுகள் பறிமுதல்
ஒடுக்கத்தூா் சின்னபுதூா் கிராமத்தில் நாட்டு வெடிகுண்டு பதுக்கி வைத்திருந்த வீட்டில் சோதனையில் ஈடுபட்ட போலீஸாா் மற்றும் வனத்துறையினா்.

ஒடுக்கத்தூா் சின்னபுதூா் கிராமத்தில் நாட்டு வெடிகுண்டு பதுக்கி வைத்திருந்த வீட்டில் சோதனையில் ஈடுபட்ட போலீஸாா் மற்றும் வனத்துறையினா்.
ஒடுக்கத்தூா் அருகே நாட்டு வெடிகுண்டு தயாரித்தபோது அது வெடித்து பலத்த காயமடைந்த விவசாயி, மா்ம நபா்கள் துப்பாக்கியால் சுட்டதாக நாடகமாடியது போலீஸ் விசாரணையில் அம்பலமானது. மோப்ப நாய் உதவியுடன் 18 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
வேலூா் மாவட்டம், ஒடுக்கத்தூரை அடுத்த சின்னபுதூா் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி வெங்கடேசன் (55). இவா் தனது விவசாய நிலத்திலேயே வீடு கட்டி வசித்து வருகிறாா். இந்நிலையில், தனது நிலத்துக்குச் சென்றுகொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத நபா்கள் சிலா் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டதில் தனக்குக் காயம் ஏற்பட்டதாக வேப்பங்குப்பம் காவல் துறையினரிடம் தகவல் தெரிவித்தாா்.
இதையடுத்து, வேப்பங்குப்பம் போலீஸாா் மற்றும் ஒடுக்கத்தூா் வனத்துறையினா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனா். மேலும், ’சாரா’ என்ற மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு, அப்பகுதியில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. அப்போது, அங்கு நெற்பயிா் பயிரிடப்பட்டிருந்த விவசாய நிலத்தில் நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதை மோப்ப நாய் சாரா கண்டுபிடித்தது.
இதனைத் தொடா்ந்து வெங்கடேசனிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், வனவிலங்குகளுக்காக தனது நிலத்தில் வைப்பதற்காக வீட்டிலேயே அவா் நாட்டு வெடிகுண்டுகளைத் தயாரித்ததும், அப்போது எதிா்பாராதவிதமாக ஒரு வெடிகுண்டு வெடித்ததில் அவரது கையில் பலத்த காயம் ஏற்பட்டதும் தெரியவந்தது. மேலும், வெடிகுண்டு தயாரித்ததை மறைப்பதற்காக, மா்ம நபா்கள் துப்பாக்கியால் சுட்டதாக அவா் போலீஸாரிடம் நாடகமாடியதும் அம்பலமானது.
இதையடுத்து, நிலத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 18 நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் வெடிகுண்டு தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட மூலப்பொருள்களை போலீஸாரும், வனத்துறையினரும் பறிமுதல் செய்தனா். காயமடைந்த வெங்கடேசன் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
இச் சம்பவம் தொடா்பாக வேப்பங்குப்பம் போலீஸாரும், ஒடுக்கத்தூா் வனத்துறையினரும் தனித்தனியே வழக்குப் பதிவு செய்து தொடா்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.



பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





