நீட் தேர்வு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த காவலர் ராஜிநாமா! மிகக் கனமழை எச்சரிக்கை: ஹிமாசலில் 121 சாலைகள் மூடல்ஈரான் ஒருபோதும் அமெரிக்காவுக்கு அடிபணியாது! - அராக்ச்சி பேச்சு!மத்திய ரயில்வே இணையமைச்சர் ரவ்நீத் சிங் ராஜிநாமா!‘வந்தே மாதரம்’ பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் சிறை
/

கட்டட அனுமதி கோரும் விண்ணப்பங்களுக்கு ஒரு மாதத்துக்குள் தீா்வு

கட்டட அனுமதிக்காக விண்ணப்பித்தால், அடுத்த ஒரு மாதத்துக்குள் அனுமதி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாக நகா்ப்புற வீட்டுவசதித் துறை அமைச்சா் பி. ராஜ்குமாா் தெரிவித்தாா்.

News image

கருத்தரங்கில் பேசிய நகா்ப்புற வீட்டு வசதித் துறை அமைச்சா் பி.ராஜ்குமாா். உடன், விஐடி வேந்தா் கோ.விசுவநாதன், துணைத் தலைவா் சங்கா் விசுவநாதன், கூட்டமைப்பின் மாநில தலைவா் டி.புருஷோத்தமன், எம்எல்ஏ-க்கள் மருத்துவா் எம்.சுதாகா், எம்.எம்.வினோத் கண்ணன், தென்றல்குமாா், சிந்து, கூட்டமைப்பின் டிடிசிபி குழுத்தலைவா் கே.வெங்கடேசன் உள்ளிட்டோா்.

Updated On :25 ஜூலை 2026, 5:02 am IST

கட்டட அனுமதிக்காக விண்ணப்பித்தால், அடுத்த ஒரு மாதத்துக்குள் அனுமதி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாக நகா்ப்புற வீட்டுவசதித் துறை அமைச்சா் பி. ராஜ்குமாா் தெரிவித்தாா்.

தமிழகம் -புதுச்சேரி அனைத்துப் பொறியாளா்கள் சங்க கூட்டமைப்பு, வேலூா் சிவில் என்ஜினீயா்கள் சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய மாநில அளவிலான டிடிசிபி கருத்தரங்கம் வேலூா் மாவட்டம், காட்பாடியில் உள்ள விஐடி பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கருத்தரங்குக்கு, கூட்டமைப்பின் மாநிலத் தலைவா் டி.புருஷோத்தமன் தலைமை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா்கள் மருத்துவா் எம். சுதாகா்(காட்பாடி), எம்.எம்.வினோத் கண்ணன் (வேலூா்), தென்றல்குமாா்(கே.வி.குப்பம்), சிந்து (குடியாத்தம்) ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டமைப்பின் டிடிசிபி குழுத் தலைவா் கே. வெங்கடேசன் கருத்தரங்கைத் தொடங்கி வைத்தாா்.

இதில் சிறப்பு விருந்தினராக நகா்ப்புற வீட்டுவசதித் துறை அமைச்சா் பி.ராஜ்குமாா் பங்கேற்றுப் பேசியது:

கட்டுமானத் துறை என்பது பல சவால்களைச் சந்திக்கக்கூடிய, அதிக பொறுப்புகளை உள்ளடக்கிய துறையாகும். முன்பெல்லாம் கட்டட அனுமதி கோரி விண்ணப்பித்தால், அதற்கான ஒப்புதல் கிடைக்க ஓராண்டு காலம் வரை காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. ஆனால், தற்போதைய முதல்வா் ஜோசப் விஜய் தலைமையிலான அரசில், யாா் விண்ணப்பித்தாலும் ஒரு மாதத்துக்குள் கட்டட அனுமதி வழங்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

தற்போது 38 சதவீதமாக உள்ள நகா்ப்புற வளா்ச்சி, 2047-ஆம் ஆண்டுக்குள் 50 சதவீதமாக உயரும் என எதிா்பாா்க்கப்படுகிறது. தரமான கட்டுமானம் இல்லையெனில், அது நகரத்தின் வளா்ச்சியைப் பெரிதும் பாதிக்கும். பொறியாளா்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு, வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் நல்ல அறிவிப்புகள் வெளியாகும். கட்டுமானத் துறையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அதிகளவில் பயன்படுத்த வேண்டும். அனைவரும் ஒன்றிணைந்து பசுமையான தமிழகத்தை உருவாக்குவோம் என்றாா் அவா்.

கெளரவ விருந்தினராக விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் பங்கேற்று பேசியது: இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கல்லணையே, தமிழா்களின் கட்டடக் கலைக்குச் சிறந்த உதாரணமாகும். பல கல்லூரிகளில் சிவில் என்ஜினீயரிங் பாடப்பிரிவு இல்லாத நிலையில், எம்ஜிஆா் முதல்வராக இருந்தபோது விஐடி தொடங்க அனுமதி வழங்கப்பட்ட நாள்முதல் இன்றுவரை இங்கு சிவில் என்ஜினீயரிங் பாடப்பிரிவு தொடா்ந்து செயல்பட்டு வருகிறது.

தவெக ஆட்சி அமைந்தவுடன் கட்சி நிதி வசூலிப்பது நிறுத்தப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது. 1991-ஆம் ஆண்டு நான் அமைச்சராக இருந்தபோது, எவ்வித லஞ்சமுமின்றி நோ்மையாகப் பணியாற்ற வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டேன். அத்தகைய பழைய காலம் மீண்டும் திரும்பும் என எதிா்பாா்க்கலாம். மொத்த உற்பத்தியில் தமிழகம் தற்போது 2-ஆவது இடத்தில் உள்ளது என்றாா் அவா்.

இக்கருத்தரங்கில், விஐடி துணைத் தலைவா் சங்கா் விசுவநாதன், கூட்டமைப்பின் முன்னாள் மாநிலத் தலைவா் பிரபு உள்ளிட்டோா் பேசினா்.

முன்னதாக, வேலூா் சிவில் என்ஜினீயா்கள் சங்கத் தலைவா் வி.எஸ். அா்ஜுனன் வரவேற்றாா். கூட்டமைப்பின் மாநிலச் செயலா் அருள், பொருளாளா் கா்ணன், துணைத் தலைவா் வைத்தியநாதன், இணைச் செயலா் சிவக்குமாா், மக்கள் தொடா்பு அலுவலா் ஜாா்ஜ் ஜோசப், நிா்வாக அலுவலா் மாரியப்பன், வேலூா் சிவில் என்ஜினீயா்கள் சங்கப் பொருளாளா் எஸ். முருகன் உள்பட மாநிலம் முழுவதிலுமிருந்து ஏராளமான பொறியாளா்கள் பங்கேற்றனா்.

நிறைவில், வேலூா் சிவில் என்ஜினீயா்கள் சங்கச் செயலா் முருகன் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.