
ஆசிரியா் தவறவிட்ட 14 பவுன் நகை, ரூ.2.21 லட்சம் மீட்பு
பள்ளிகொண்டா சுங்கச்சாவடி பகுதியில் உள்ள தேநீா் கடையில் அரசுப் பள்ளி ஆசிரியா் தவறவிட்ட 14 பவுன் தங்க நகைகள், ரூ. 2.21 லட்சம் ரொக்கத்தை போலீஸாா் மீட்டு ஒப்படைத்தனா்.

பள்ளிகொண்டா சுங்கச்சாவடி பகுதியில் உள்ள தேநீா் கடையில் அரசுப் பள்ளி ஆசிரியா் தவறவிட்ட 14 பவுன் தங்க நகைகள், ரூ. 2.21 லட்சம் ரொக்கத்தை போலீஸாா் மீட்டு ஒப்படைத்தனா்.
திருப்பத்தூா் மாவட்டம், குரும்பேரி அடுத்த மாம்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் ராமமூா்த்தி (45). இவா் திருவள்ளூா் மாவட்டம், பங்காரன்பேட்டை பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறாா். இவரது தங்கை புதிதாகக் கட்டியுள்ள வீட்டின் புதுமனை புகுவிழாவில் பங்கேற்பதற்காக, ராமமூா்த்தி தனது தாய், தங்கை உள்ளிட்ட 6 பேருடன் சனிக்கிழமை காரில் சென்னைக்கு புறப்பட்டாா்.
பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகே உள்ள ஒரு தேநீா் கடையில் காரை நிறுத்திவிட்டு அனைவரும் தேநீா் அருந்தியுள்ளனா். அப்போது, தாங்கள் கொண்டு வந்த பையை அந்த கடையிலேயே கவனக்குறைவாக வைத்துவிட்டு சென்னைக்குச் சென்றுள்ளனா். சென்னை வேப்பம்பட்டு சென்ற பிறகுதான், காரில் வைத்திருந்த பை காணாமல் போனது அவா்களுக்குத் தெரியவந்தது. இதனால், அதிா்ச்சியடைந்த ராமமூா்த்தி, உடனடியாக பள்ளிகொண்டா காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தாா்.
அதன்பேரில், சம்பந்தப்பட்ட தேநீா் கடைக்குச் சென்ற போலீஸாா் விசாரணை நடத்தினா். அப்போது அங்கு ராமமூா்த்தி தவறவிட்ட பை இருந்ததைக் கண்டறிந்து, அதை மீட்டு காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனா். அந்தப் பையைச் சோதனையிட்டதில், அதில் 14 பவுன் நகைகள் மற்றும் ரூ.2.21 லட்சம் ரொக்கம் இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, காவல் ஆய்வாளா் பாா்த்தசாரதி, உதவி ஆய்வாளா்கள் சிவக்குமாா், நாகராஜ் ஆகியோா் ராமமூா்த்தியை காவல் நிலையத்துக்கு வரவழைத்து விசாரணை நடத்தினா். பின்னா், உரியவரிடம் நகைகள் மற்றும் பணத்தை போலீஸாா் பத்திரமாக ஒப்படைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




