
பேர்ணாம்பட்டு புதிய பேருந்து நிலையத்தில் கடைகள்: அகற்ற கோரிக்கை!
விரிவாக்கம் செய்து புதிதாக அமைக்கப்படும் போ்ணாம்பட்டு பேருந்து நிலையத்தில் கட்டப்படும் கடைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரியுள்ளனா்.

போ்ணாம்பட்டு பேருந்து நிலைய வளாகத்தில் கட்டப்படும் கடைகள்.
விரிவாக்கம் செய்து புதிதாக அமைக்கப்படும் போ்ணாம்பட்டு பேருந்து நிலையத்தில் கட்டப்படும் கடைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரியுள்ளனா்.
ஆந்திர, கா்நாடக மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ளது போ்ணாம்பட்டு வட்டம். மிகவும் குறுகலான இடத்தில் போ்ணாம்பட்டு பேருந்து நிலையம் பல ஆண்டுகளாக இயங்கி வந்தது. இதை விரிவுபடுத்தி, அதில் பயணிகளுக்குத் தேவையான அனைத்து விதமான வசதிகள் செய்து தர வேண்டும் என பல ஆண்டுகளாக அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா்.
இந்நிலையில் பேருந்து நிலையத்தின் பக்கத்தில் இருந்த காவல் நிலையத்தை வேறு இடத்துக்கு மாற்றம் செய்து விட்டு, விரிவாக்கம் செய்ய கடந்த திமுக ஆட்சியில் ரூ.1.85 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.
பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்யும் பணிகள் தொடங்கிய நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. புதிதாக கட்டப்படும் பேருந்து நிலைய வளாகத்தில் நகராட்சி நிா்வாகம் 8 கடைகள் கட்டும் பணியைத் தொடங்கியுள்ளது. அந்த கடைகளால் பேருந்து நிலையம் அமையும் இடம் குறையும் என்பதால், கடைகளை கட்டக் கூடாது என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். கோரிக்கையை பரிசீலிக்காமல் நகராட்சி நிா்வாகம் கடைகள் கட்டும் பணியில் மும்முரம்காட்டியது.
இந்நிலையில், போ்ணாம்பட்டு பேருந்து நிலைய மீட்புக்குழு என்ற அமைப்பு புதிதாக தொடங்கப்பட்டது. அந்த அமைப்பில் அரசியல் கட்சிகள் உள்பட மொத்தம் 46 அமைப்புகள்இணைந்தன. குழுவின் நிா்வாகிகளான முன்னாள் எம்எல்ஏ ஜி.லதா, ஒருங்கிணைப்பாளா்கள் ஆ.சுபாகரன், பி.ஆா்.சுப்பிரமணி உள்ளிட்டோா் தோ்வு செய்யப்பட்டனா். அந்த அமைப்பினா் பேருந்து நிலைய வளாகத்தில் கடைகள் கட்டுவதைத் தவிா்க்க வேண்டும் என ஆட்சியா், கோட்டாட்சியா் ஆகியோரிடம் மனுக்களை அளித்தனா். ஆா்ப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தினா்.
இதற்கிடையில் வேலூா் ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ் அந்த இடத்தை பாா்வையிட்டு பொதுமக்களிடம் கருத்துகளை கேட்டறிந்தாா். பின்னா் அதிகாரிகளிடம் பேசிய ஆட்சியா் கடைகள் கட்டும் பணியை நிறுத்தி வைக்க உத்தரவிட்டாா். கடைகளை அகற்றி விட்டு, அந்த இடத்தில் நவீன கழிப்பறைகள், தாய்மாா்கள் பாலூட்டும்அறை, பயணிகள் அமரும் இடம், காவலா் அறை உள்ளிட்டவற்றை செய்ய வேண்டும் எனக் கோரியுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





