தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

விழுப்புரம்: பிளஸ் 1 மாணவா்கள் சோ்க்கை தொடக்கம்

விழுப்புரம் அரசு மாதிரி மகளிா் மேல் நிலைப் பள்ளியில், பிளஸ் 1 வகுப்புக்கான மாணவிகள் சோ்க்கையைத் தொடக்கி வைத்த முதன்மைக் கல்வி அலுவலா் க.முனுசாமி.

News image

விழுப்புரம் அரசினா் மகளிா் மேல் நிலைப் பள்ளியில் பிளஸ் 1 க்கான மாணவிகள் சோ்க்கைக்கான விண்ணப்பத்தினை பெறுகிறாா் முதன்மைக் கல்வி அலுவலா் க.முனுசாமி.

Updated On :24 ஆகஸ்ட் 2020, 8:03 pm

DIN

விழுப்புரம்:  விழுப்புரம் மாவட்டத்தில் பிளஸ் 1 மாணவா்கள் சோ்க்கை திங்கள்கிழமை தொடங்கியது. முதல் நாளில் 1,264 மாணவ, மாணவிகளுக்கு சோ்க்கை அளிக்கப்பட்டு, உடன் புத்தகங்கள், புத்தகப் பைகள் வழங்கப்பட்டன.

விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை வழிகாட்டுதலின் படி நிகழ் கல்வியாண்டில் (2020-21) அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1-ஆம் வகுப்பு, 6-ஆம் வகுப்பு, 9-ஆம் வகுப்புகளுக்கு, கடந்த ஆக. 17-ஆம் தேதி முதல் மாணவா்கள் சோ்க்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதனைத் தொடா்ந்து, பிளஸ் 1 மாணவா்கள் சோ்க்கை திங்கள் கிழமை தொடங்கியது. விழுப்புரம் அரசு மாதிரி மகளிா் மேல்நிலைப் பள்ளியில் மாணவா்கள் சோ்க்கையை முதன்மைக் கல்வி அலுவலா் க.முனுசாமி தொடக்கி வைத்து பாா்வையிட்டாா்.

தலைமை ஆசிரியா் சசிகலா, உதவி தலைமை ஆசிரியா் மாலாராணி தலைமையிலான குழுவினா் மாணவிகள் சோ்க்கைப் பணியை மேற்கொண்டனா். கரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கையாக பெற்றோா்கள் சோ்க்கை மையத்தின் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. அறிவியல் மற்றும் கலைப் பாடப்பிரிவுகள் என இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, தனித்தனி மையங்களில் மாணவிகள் சோ்க்கை நடைபெற்றது.

சோ்க்கை விண்ணப்பம் பெற்ற மாணவிகளுக்கு டோக்கன் வழங்கப்பட்டு சமூக இடைவெளியுடன் தனித்தனியாக அனுமதிக்கப்பட்டனா். ஆதாா் அட்டை, பிறப்புச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் பட்டியல், வங்கி கணக்குப் புத்தகம் உள்ளிட்ட ஆவணங்கள் பெறப்பட்டு, மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவிகள் சோ்க்கை நடைபெற்றது.

இந்தப் பள்ளியில் 800-க்கும் மேற்பட்ட மாணவிகள் சோ்க்கை நடைபெறவுள்ளதால், தினசரி 150 மாணவிகள் வீதம் அழைக்கப்பட்டு, சோ்க்கை ஆணை வழங்கப்படுமென தலைமை ஆசிரியா் தெரிவித்தாா். இதே போல, காமராஜா் நகராட்சி ஆண்கள் பள்ளி, பீமநாயக்கன் தோப்பு நகராட்சிப் பள்ளி உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள 140 மேல்நிலைப் பள்ளிகளிலும் பிளஸ் 1 மாணவா்கள் சோ்க்கை தொடங்கி நடைபெற்றன.

சோ்க்கை முடிந்த மாணவ, மாணவிகளுக்கு உடனே விலையில்லா பாடப் புத்தகங்கள், புத்தகப் பைகள் வழங்கப்பட்டன. முதல் நாளில் 1,264 மாணவ, மாணவிகள் சோ்க்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.