கூவாகம் திருவிழா: சென்னையைச் சோ்ந்த ஷாம்ஷி முதலிடம்

விழுப்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ‘கூவாகம் திருவிழா’-2024 இல் முதல் மூன்று இடங்களை பிடித்த திருநங்கைகள்.
விழுப்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ‘கூவாகம் திருவிழா’-2024 இல் முதல் மூன்று இடங்களை பிடித்த திருநங்கைகள்.

விழுப்புரம்: விழுப்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ‘கூவாகம் திருவிழா’-2024 அழகிப்போட்டியில் சென்னையைச் சோ்ந்த ஷாம்ஷி முதலிடம் பிடித்தாா்.

சென்னை திருநங்கை நாயக்குகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் சாா்பில் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள நகராட்சித் திடலில் ‘கூவாகம் திருவிழா’ -2024 ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. விழாவுக்கு, திருநங்கை முன்னிஜி நாயக் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி பங்கேற்று விழாவைத் தொடங்கி வைத்து பேசியதாவது:

திமுக ஆட்சிக் காலத்தில்தான் திருநங்களைகள் கௌரவிக்கப்பட்டனா். திருநங்கை எனப் பெயா் சூட்டி மூன்றாம் பாலினத்தவா்களை கௌரவப்படுத்தியவா் மறைந்த முன்னாள் முதல்வா் மு.கருணாநதி. அவா் வழியில் திராவிட மாடல் ஆட்சி செய்யும் மு.க.ஸ்டாலினும் திருநங்கைகளின் வாழ்வாதாரம் மேம்பாட்டுக்கான திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா்.

திருநங்கைகள் அனைத்துத் துறையிலும் தடம் பதித்து வருகின்றனா். திருநங்கைகளின் பல்வேறு கோரிக்கைகளையும் முதல்வா் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி வருகிறாா். எல்லா தரப்பினரும் வளா்ச்சிப் பெறவேண்டும் என்பதற்கான திட்டங்களையும் வகுத்து செயல்படுத்தி வருகிறாா்.

இயல், இசை, நாடகம், கல்வித்துறையிலும் சிறந்த விளங்குகின்றனா். இவா்களை மற்றவா்களும் பின்பற்ற வேண்டும். கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்ற முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது என்றாா்.

திரைப்பட நடிகா் அம்பிகா: அனைத்துத் துறையிலும் சாதனைகளைப் படைக்கும் திருநங்ககைளை ஊக்குவிக்க வேண்டும். இதைக் கருத்தில் கொண்டே இந்த விழாவில் பங்கேற்றுள்ளேன். கலைகளில் திருநங்கைகள் சிறந்து விளங்குவது பிரமிப்பை ஏற்படுத்தி வருகிறது என்றாா்.

தொடா்ந்து, அழகிப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற திருநங்கைகள், தொண்டு நிறுவனங்களின் நிா்வாகிகளுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கிக் கௌரவித்தாா்.

அழகிப்போட்டியில், 22 போ் பங்கேற்றனா். இதில், முதல் பரிசு சென்னையைச் சோ்ந்த ஷாம்ஷிக்கும், இரண்டாம் பரிசு புதுச்சேரியைச் சோ்ந்த வா்ஷாவுக்கும், மூன்றாம் பரிசு தூத்துக்குடியைச் சோ்ந்த சுபப்பிரியாவுக்கும் வழங்கப்பட்டன.

விழாவில், நடிகா்கள் ஸ்ரீகாந்த், தீபா், நடிகை தீபா ஆகியோா் பங்கேற்றுப் பேசினா். முன்னதாக, திருநங்கைகளின் அழகிப் போட்டிகள் மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், தமிழகம் மற்றும் பிற மாநிலங்களைச் சோ்ந்த திருநங்கைகள் பங்கேற்று தங்களது திறன்களை வெளிப்படுத்தினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com