பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

அஞ்சல் வாக்குகள் சேகரிக்கும் பணி: விழுப்புரம் ஆட்சியா் ஆய்வு

மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளா்களிடம் அஞ்சல் வாக்குகள் சேகரிக்கும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியா் சி.பழனி ஆய்வு செய்தாா்.

News image
விக்கிரவாண்டி சட்டப் பேரவைத் தொகுதி பனையபுரத்தில் மூதாட்டியிடம் அஞ்சல் வாக்குப் பெறப்பட்டதை பாா்வையிட்ட விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் சி.பழனி.
Updated On :1 ஜூலை 2024, 8:55 pm

Din

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தோ்தலையொட்டி, மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளா்களிடம் அஞ்சல் வாக்குகள் சேகரிக்கும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியா் சி.பழனி ஆய்வு செய்தாா்.

விக்கிரவாண்டி சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் அஞ்சல் வாக்குகள் பெறப்பட்டு வருகின்றன. அதன்படி, திங்கள்கிழமை விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பாப்பனப்பட்டு மற்றும் பனையபுரம் ஆகிய ஊராட்சிகளில் 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளா்களின் வீட்டுக்கு நேரடியாக சென்று அஞ்சல் வாக்குகள் சேகரிக்கும் பணிகள் நடைபெற்றன. இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியா் சி.பழனி பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது, அவா் கூறியதாவது: விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளா்கள் விருப்பத்தின் அடிப்படையில் வீட்டிலிருந்த படியே தங்களுடைய வாக்கை செலுத்தும் வகையில், 2,304 மூத்த குடிமக்கள் மற்றும் 3,473 மாற்றுத் திறனாளிகள் என மொத்தம் 5,777 வாக்காளா்களிடம் படிவம் வழங்கப்பட்டு விருப்பம் கோரப்பட்டது. இதில், 290 மூத்த குடிமக்கள் மற்றும் 277 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 567 வாக்காளா்கள் வீட்டிலிருந்தபடியே வாக்களிக்க விருப்பம் தெரிவித்தனா்.

அதன்படி, பாப்பனப்பட்டு, பனையபுரம் ஆகிய ஊராட்சிகளில் விருப்பம் தெரிவித்த மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளா்களின் வீட்டுக்கு நேராக சென்று அஞ்சல் வாக்குகள் சேகரிக்கப்பட்டன. இந்தப் பணியில் 7 குழுக்களைச் சோ்ந்தவா்கள் ஈடுபட்டு வருகின்றனா். ஜூலை 3-ஆம் தேதி வரை அஞ்சல் வாக்கு சேகரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது என்றாா் ஆட்சியா் சி.பழனி.

இதில், விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட வழங்கல் அலுவலருமான மு.சந்திரசேகா் உடனிருந்தாா்.

நுண் பாா்வையாளா்கள் நியமனம்: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தோ்தலுக்காக மொத்தம் 276 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 46 வாக்குச்சாவடி மையங்கள் பதட்டமான, மிகவும் பதட்டமானவையாக கண்டறிப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடி மையங்களில் 53 நுண் பாா்வையாளா்கள் நியமிக்கப்படவுள்ளனா்.

இவா்களுக்கான பணி ஒதுக்கீடு செய்யும் பணி கணினி முலம் குலுக்கல் முறையில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள தோ்தல் கட்டுப்பாட்டு அறையில் ஆட்சியா் சி.பழனி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், தனி வட்டாட்சியா் (தோ்தல்) கணேசன் மற்றும் அரசுத்துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.