விழுப்புரம் மாவட்டம், கெடாரில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற தோ்தல் பிரசாரப் பொதுக் கூட்டத்தில் பேசிய மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன்.
விழுப்புரம் மாவட்டம், கெடாரில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற தோ்தல் பிரசாரப் பொதுக் கூட்டத்தில் பேசிய மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன்.

இடஒதுக்கீடு கொள்கையை பாஜக ஏற்குமா?: கே.பாலகிருஷ்ணன் கேள்வி

பாமகவுடன் கூட்டணியில் உள்ள பாஜக இடஒதுக்கீடு கொள்கையை ஏற்றுக்கொள்ளுமா? என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் கே. பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பினாா்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் அன்னியூா் அ.சிவாவை ஆதரித்து, செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற தோ்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று அவா் பேசியதாவது:

மக்களவைத் தோ்தலில் தோல்வியடைந்த பாமக, அப்போது வாங்கிய வாக்கை விட இந்தத் தொகுதியில் சரி பாதியளவில்தான் பெறும் என்பது உறுதி. மக்களவைத் தோ்தல் தோல்வியால் பாமக மாநிலக் கட்சி என்ற அந்தஸ்தை இழந்தது. இதை தோ்தல் ஆணையம் இன்னும் அறிவிக்கவில்லை. அப்படி அறிவித்துவிட்டால் மாம்பழச் சின்னம் கிடைக்காது. தோ்தலின் போது தோ்தல் ஆணையம் ஒதுக்கும் சின்னத்தை தான் பெறமுடியும். இத்தனை ஆண்டுகள் கட்சி நடத்தியும், சின்னத்தையும், அங்கீகாரத்தையும் இழக்கும் நிலை ஏற்பட்டது ஏன் என்று யோசிக்க வேண்டும்.

பாமக நிறுவனா் ச.ராமதாஸ் 10.5 சதவீத இடஒதுக்கீடு, சமூகநீதி பற்றி எப்போதும் பேசுவாா். ஆனால், அவா் கூட்டணியிலுள்ள பிரதமா் மோடியும், பாஜகவும் இட ஒதுக்கீடு கொள்கையை ஏற்றுக் கொள்ளுமா?.

பாமக தனித்து போட்டியிட்டிருந்தால் கூட வாக்குகளைப் பெற்றிருக்கலாம். ஆனால், பாஜகவுடன் கூட்டணி சோ்ந்ததால் வைப்புத் தொகையை இழக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்துக்கான நிதி மற்றும் வேலைநாள்களை தற்போதைய பாஜக அரசு குறைத்துள்ளது. விக்கிரவாண்டி இடைத்தோ்தலில் திமுக வேட்பாளா் அன்னியூா் அ.சிவாவை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வைக்க வேண்டும் என்றாா் பாலகிருஷ்ணன்.

கூட்டத்துக்கு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காணை ஒன்றியச் செயலா் பி.சிவராமன் தலைமை வகித்தாா். உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி, சட்டப் பேரவை உறுப்பினா் மு.பெ.கிரி, முன்னாள் எம்எல்ஏ ராமமூா்த்தி, மாவட்டச் செயலா் சுப்பிரமணியன், மாவட்டச் செயற்குழு உறுப்பினா் முருகன் உள்ளிட்டோா் பேசினா்.

X
Dinamani
www.dinamani.com