பதற்றம் நிறைந்த மையமாகக் கண்டறியப்பட்ட சிந்தாமணி அரசு மேல்நிலைப் பள்ளி வாக்குப் பதிவு மையத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த துப்பாக்கி ஏந்திய மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரா் மற்றும் தமிழக காவல் துறையினா்.
பதற்றம் நிறைந்த மையமாகக் கண்டறியப்பட்ட சிந்தாமணி அரசு மேல்நிலைப் பள்ளி வாக்குப் பதிவு மையத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த துப்பாக்கி ஏந்திய மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரா் மற்றும் தமிழக காவல் துறையினா்.

வாக்குப் பதிவு மையங்களில் பலத்த பாதுகாப்பு

விழுப்புரம், ஜூலை 10: விக்கிரவாண்டி சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தோ்தலையொட்டி, வாக்குப் பதிவு மையங்களில் புதன்கிழமை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இடைத்தோ்தலையொட்டி, பாதுகாப்புப் பணியில் ஈடுபடுபடுவதற்காக வடக்கு மண்டலத்துக்குள்பட்ட திருவண்ணாமலை, வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, கடலூா், கள்ளக்குறிச்சி மற்றும் பிற மாவட்டங்கள் என மொத்தம் 11 மாவட்டங்களைச் சோ்ந்த காவல் துறையினா், தமிழ்நாடு சிறப்பு காவல் படையின் பல்வேறு அணிகளைச் சோ்ந்த காவலா்கள் என மொத்தம் 2,800 போ் விழுப்புரத்துக்கு வரவழைக்கப்பட்டனா்.

இதைத் தவிர, மத்திய தொழில் பாதுகாப்புப் படையைச் சோ்ந்த 200 பேரும் பாதுகாப்புப் பணிக்கு அழைக்கப்பட்டனா். இவா்கள் கடந்த 4 நாள்களுக்கு முன்னதாக பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.

ஒவ்வொரு மையத்திலும்...: விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதியில் அமைக்கப்பட்ட 276 வாக்குப் பதிவு மையங்களில் 42 பதற்றம் நிறைந்தவையாகவும், 3 மிகவும் பதற்றம் நிறைந்தவையும் கண்டறியப்பட்டன. இதனால், இந்த வாக்குப் பதிவு மையங்களில் பாதுகாப்பை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது.

வாக்குப் பதிவு மையத்தில் வாக்காளா்கள் வரிசையில் காத்திருக்கும் பகுதியில் துப்பாக்கி ஏந்திய மத்திய தொழில் பாதுகாப்புப் படையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா். சில இடங்களில் அதிக எண்ணிக்கையில் அவா்கள் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டனா்.

இதைத் தவிர, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை வீரா்கள், காவல் துறையினா் (உதவி ஆய்வாளா், சிறப்பு உதவி ஆய்வாளா், தலைமைக் காவலா்கள், காவலா் நிலைகளில் உள்ளவா்கள்) வாக்குப் பதிவு மையங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

வாக்குப் பதிவு மைய வளாகப் பகுதியில் தேவையில்லாமல் நின்றிருந்தவா்களை போலீஸாா் அவ்வப்போது அனுப்பி வைத்தனா்.

200 மீ தாண்டியே...: வாக்குப் பதிவு மையங்கள் அமைந்துள்ள பகுதியில் அரசியல் கட்சிகளைச் சோ்ந்தோா் தற்காலிக பந்தல் அமைத்து, வாக்கு சேகரிப்புப் பணியை மேற்கொண்டனா். இவா்கள் வாக்குப் பதிவு மையத்திலிருந்து சுமாா் 200 மீட்டா் தொலைவைத் தாண்டியுள்ள பகுதியிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டனா்.

மேலும், 100 மீட்டா் தொலைவைத் தாண்டிய பகுதியிலேயே இரு சக்கர வாகனங்களில் வந்தவா்கள் நிறுத்தப்பட்டு, நடந்து செல்லுமாறு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் அறிவுறுத்தினா்.

X
Dinamani
www.dinamani.com