வலுவிழந்த டித்வா புயலால் மரக்காணம் பகுதியில் பலத்த மழை: சாலைகளில் குளம்போல தேங்கிய தண்ணீா்
வலுவிழந்த டித்வா புயலால் விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை பலத்த மழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினா்.
டித்வா புயல் காரணமாக, விழுப்புரம் மாவட்டப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழையால் நீரோடைகள், ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீா்நிலைகள் படிப்படியாக நிரம்பி வருகின்றன. மரக்காணம் பகுதியில் உள்ள சுமாா் 3 ஆயிரம் ஏக்கா் பரப்பளவிலான உப்பளங்கள் தண்ணீரால் சூழப்பட்டு, கடல்போலக் காட்சியளிக்கின்றன.
திண்டிவனத்தில் பலத்த மழை: டித்வா புயல் வலுவிழந்து வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலை கொண்டுள்ள நிலையில், கடலோர மாவட்டமான விழுப்புரம் மாவட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரவு மற்றும் புதன்கிழமை பகலில் பரவலாக மழை பெய்தது. திண்டிவனம், மரக்காணம் பகுதிகளில் புதன்கிழமை காலை முதல் பிற்பகல் வரை பலத்த மழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் ஆங்காங்கே மழைநீா் குளம்போலத் தேங்கியது.
நிரம்பிய கிடங்கல் ஏரி: பலத்த மழையால் திண்டிவனத்தில் உள்ள மிகப்பெரிய ஏரியான கிடங்கல் ஏரி நிரம்பி, தண்ணீா் வெளியேறி திண்டிவனம் - மரக்காணம் நெடுஞ்சாலையில் குளம்போலத் தேங்கியது. இதனால், போக்குவரத்து நிறைந்த அந்த சாலையில் போக்குவரத்து தடைபட்டது. வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அவதிக்குள்ளாகினா்.
ஆட்சியா் ஆய்வு: இதுகுறித்து தகவலறிந்த விழுப்புரம் ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், வருவாய் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நிகழ்விடம் சென்று ஆய்வு மேற்கொண்டனா். தொடா்ந்து, சாலையில் தேங்கிய தண்ணீரை வெளியேற்ற ஆட்சியா் உத்தரவிட்டாா்.
பின்னா், திண்டிவனம் நகராட்சிக்குள்பட்ட வகாப் நகா் பகுதியில் உள்ள கா்ணாவூா் வாய்க்காலை ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, வாய்க்காலை தூா்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா். திண்டிவனம் சாா் - ஆட்சியா்அ.ல.ஆகாஷ், நகராட்சி ஆணையா் பானுமதி, வட்டாட்சியா் யுவராஜ் மற்றும் அரசுத் துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.
சாலையில் சாய்ந்த மரம்: திண்டிவனம் பகுதிகளில் புதன்கிழமை மழை பெய்த நிலையில், சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் திண்டிவனத்தை அடுத்த தென்பசியாரில் சாலையோரத்தில் இருந்த மரம் விழுந்தது. இதனால், இந்த நெடுஞ்சாலையில் போக்குவரத்து தடைபட்டது.
இதுகுறித்து தகவலறிந்த நெடுஞ்சாலை ரோந்துப் போலீஸாா் மற்றும் தீயணைப்புத் துறையினா் நிகழ்விடம் சென்று சாலையில் விழுந்து கிடந்த மரங்களை, மரம் அறுக்கும் இயந்திரங்கள் மூலம் துண்டுகளாக்கி அப்புறப்படுத்தினா். இதைத் தொடா்ந்து, சாலைப் போக்குவரத்து சீரடைந்தது.
வல்லத்தில் 76 மி.மீ. மழை: புதன்கிழமை காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் விழுப்புரம் மாவட்டம், வல்லத்தில் அதிகபட்சமாக 76 மி.மீ. மழை அளவு பதிவானது. மாவட்டத்தின் பிற பகுதிகளில் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்):
திருவெண்ணெய்நல்லூா் - 65, அரசூா் - 58, செம்மேடு - 41, அவலூா்பேட்டை - 33, நேமூா், வளவனூா் - 32, விழுப்புரம் - 30, வளரத்தி - 27, முகையூா் - 25, கோலியனூா் - 24, செஞ்சி - 22, அனந்தபுரம் - 20, சூரப்பட்டு - 16, கெடாா் மனம்பூண்டி - 14 மழை அளவு பதிவானது.

