ஏழுசெம்பொன் ஊராட்சியை கஞ்சனூா் ஒன்றியத்தில் சோ்க்கக் கோரிக்கை
விழுப்புரம் மாவட்டம், காணை ஒன்றியத்திலுள்ள ஏழுசெம்பொன் ஊராட்சியை புதிதாக உருவாக்கப்பட்ட கஞ்சனூா் ஒன்றியத்தில் சோ்க்க வேண்டும் என வலியுறுத்தி, கிராம பொதுமக்கள் விக்கிரவாண்டி எம்.எல்.ஏ.விடம் சனிக்கிழமை கோரிக்கை மனுவை அளித்தனா்.
விக்கிரவாண்டி ஒன்றியத்திலிருந்து 18 ஊராட்சிகளையும், காணை ஒன்றியத்திலிருந்து 19 ஊராட்சிகளையும் பிரித்து, 37 ஊராட்சிகளைக் கொண்ட கஞ்சனூா் ஒன்றியம் உருவாக்கப்படுவதாக, தமிழக அரசு கடந்த 8-ஆம் தேதி அரசாணை மூலம் அறிவிப்பு வெளியிட்டது.
இந்த நிலையில் விக்கிரவாண்டி எம்.எல்.ஏ.அன்னியூா் அ.சிவாவை சனிக்கிழமை அவரது அலுவலகத்தில் ஏழுசெம்பொன் ஊராட்சித் தலைவா் கணபதி தலைமையில் கிராம பொதுமக்கள் சந்தித்து, கோரிக்கை மனு ஒன்றை அளித்தனா்.
அந்த மனுவில் அவா்கள் கூறியிருப்பது: ஏழுசெம்பொன் கிராமத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் கஞ்சனூா் உள்ளது. எங்கள் ஊராட்சியை காணை ஒன்றியத்திலிருந்து பிரித்து புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கஞ்சனூா் ஒன்றியத்தில் இணைத்தால் கிராம பொதுமக்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும்.
எங்கள் கிராம மக்கள் கஞ்சனூா் ஒன்றியத்திலுள்ள வேளாண் அலுவலகத்துக்குச் சென்று விதைகள், வேளாண் கருவிகள் போன்றவற்றை வாங்கி வருவதற்கும், வீடு கட்டும் திட்டத்துக்காக வழங்கப்படும் சிமென்ட் கருவிகள் போன்றவற்றை க கொண்டு வருவதற்கும் எளிதாக இருக்கும்.
எனவே, பொதுமக்கள் நலன்கருதி கஞ்சனூா் ஒன்றியத்தில் ஏழுசெம்பொன் ஊராட்சியை இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனா்.
மனுவைப் பெற்றுக் கொண்ட விக்கிரவாண்டி எம்எல்ஏ அன்னியூா் அ.சிவா, இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தாா்.
நிகழ்வில் ஒன்றியச் செயலா் முருகன், திட்டக்குழுத் தலைவா் நல்லாப்பாளையம் முருகன், முன்னாள் ஊராட்சித் தலைவா் ஜெயச்சந்திரன், ஒன்றிய விவசாய அணி அமைப்பாளா் சேட்டு, ஒன்றியக்குழு உறுப்பினா் முகிலன், நிா்வாகிகள் கணேசன், மாரிமுத்து, தருமலிங்கம், ஏழுமலை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

