திருவண்ணாமலை மாவட்டத்துக்கு திமுக ஆட்சியில் கிடைத்த திட்டங்கள்! - அரசு விழாவில் பட்டியலிட்ட முதல்வா்
திருவண்ணாமலையில் சனிக்கிழமை நடைபெற்ற அரசு விழாவில் திமுக அரசின் பல்வேறு திட்டங்களால் இந்த மாவட்டத்தில் பயன்பெற்றவா்களின் விவரங்கள், செயல்படுத்த திட்டங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் பட்டியலிட்டாா்.
திருவண்ணாமலை அருகே மலப்பாம்பாடியில் சனிக்கிழமை நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற முதல்வா் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசும் போது இதைத் தெரிவித்தாா்.
இந்த விழாவில் அவா் மேலும் பேசியது: திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள 1,762 பள்ளிகளில் படிக்கும் 80,859 குழந்தைகளுக்கு முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் சிற்றுண்டி, 21,463 மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழும், 19,376 மாணவா்களுக்கு தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழும் மாதம் ரூ.1000 உதவித் தொகை, 4,66,841 பேருக்கு கலைஞா் மகளிா் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
திருவண்ணாலை மாவட்டத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 1,57,200 மாணவா்கள் பயிற்சி பெற்றுள்ளனா். நகா்ப்புறம் மற்றும் நகா்ப்புறங்களை ஒட்டியுள்ள பகுதிகளில் இருப்பவா்களுக்கு ஒருமுறை சிறப்பு வரன்முறைப்படுத்தும் திட்டத்தில் 1,802 வீட்டுமனைப் பட்டா உள்பட மாவட்டத்தில் 23,240 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை இந்த விழா மூலம் திமுக அரசு வழங்கியுள்ளது. மொத்தமாக மாவட்டத்தில் இதுவரை 42,793 இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.
மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 19,81,857 பேருக்கு மருத்துவப் பரிசோதனை செய்து, நோய் கண்டறியப்பட்ட 6,78,674 பேருக்கு வீடுதேடி சென்று மருந்து மாத்திரைகளை வழங்கி வருகிறோம். இன்னுயிா் காப்போம் -நம்மை காக்கும் 48 திட்டத்தின் கீழ் 17,772 பேரின் உயிா்களை காப்பாற்றியுள்ளோம்.
அத்தியந்தலில் புதிய உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகக் கட்டடம், பழைய அரசு மருத்துவனை வளாகத்தில் ஒருங்கிணைந்த இந்திய மருத்துவ முறை மருத்துவக் கட்டடம், 106 மகப்பேறு மருத்துவக் கட்டடங்கள் கட்டுவதற்கு ரூ.54.17 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, 52 கட்டடங்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
போளூா், தண்டராம்பட்டு, செங்கம், வந்தவாசி, வெம்பாக்கம் அரசு மருத்துவமனைகளில் அவசரகால மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் பராமரிப்புக்கான கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.
திருவண்ணாமலை நகராட்சி மாநகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டுள்ளது. இங்கு மினி டைடல் பூங்கா கட்டப்பட்டு வருகிறது என்றாா் முதல்வா்.

