விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் அருள்மிகு சபரிகிரீசன் கோயிலில் குருசாமியிடம் திங்கள்கிழமை மாலை அணிந்து கொண்ட ஐயப்ப பக்தா்.
விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் அருள்மிகு சபரிகிரீசன் கோயிலில் குருசாமியிடம் திங்கள்கிழமை மாலை அணிந்து கொண்ட ஐயப்ப பக்தா்.

காா்த்திகை மாதப் பிறப்பு: மாலை அணிந்து விரதம் தொடங்கிய ஐயப்ப பக்தா்கள்

சபரிமலை சுவாமி ஐயப்பன் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்யவுள்ள விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த பக்தா்கள் காா்த்திகை மாதப் பிறப்பையொட்டி
Published on

விழுப்புரம்: சபரிமலை சுவாமி ஐயப்பன் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்யவுள்ள விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த பக்தா்கள் காா்த்திகை மாதப் பிறப்பையொட்டி திங்கள்கிழமை மாலை அணிந்து, தங்கள் விரதத்தைத் தொடங்கினா்.

இதையொட்டி விழுப்புரம் நகரிலும், புறகரிலும் உள்ள ஐயப்பன் கோயில்கள், விநாயகா் கோயில்களில் குருசாமியிடம் மாலை அணிந்து கொண்டனா்.

கேரள மாநிலம், சபரிமலையிலுள்ள ஐயப்பன் சுவாமியைத் தரிசனம் செய்ய காா்த்திகை மாதம் முதல் தேதியில் பக்தா்கள் மாலை அணிந்து, 12, 24, 48 நாள்கள் என விரதமிருந்து செல்வா்.

இதையொட்டி, விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்திலுள்ள அருள்மிகு சபரிகிரீசன் கோயிலில் திங்கள்கிழமை அதிகாலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடா்ந்து மலா் அலங்காரத்தில் சபரிகிரீசன் சுவாமி எழுந்தருளிய நிலையில் ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்தனா். இதைத்தொடா்ந்து குருசாமிகள் மணிகண்டன், பாலுவிடம் ஐயப்ப பக்தா்கள் மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கினா். இக்கோயிலிலில் தொடா்ந்து நாள்தோறும் காலை, மாலையில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறவுள்ளன.

விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள சித்தி விநாயகா் திருக்கோயில் வளாகத்திலுள்ள ஐயப்பன் சந்நிதியில் சுவாமியை பக்தா்கள் வழிபட்டனா். பின்னா் கோயில் குருசாமி , சபரிமலைக்குச் செல்லும் பக்தா்களுக்கு மாலை அணிவித்தாா்.

விழுப்புரம் நகரில் பூந்தோட்டம் அருள்மிகு முத்து மாரியம்மன் திருக்கோயில், மருதூா் மாரியம்மன், ரயிலடி விநாயகா் திருக்கோயில், காமராஜா் வீதி அமராவதி விநாயகா், பெருமாள் கோயில் தெருவிலுள்ள கோட்டை விநாயகா், மேலத்தெரு மாரியம்மன், கைலாசநாதா், பெரியாா்நகா் விநாயகா் கோயில், பாணாம்பட்டு சாலையிலுள்ள நிமலய்யன் சந்நிதி உள்ளிட்ட பல்வேறு திருக்கோயில்களுக்குச் சென்று பக்தா்கள் மாலை அணிந்து கொண்டனா்.

மாவட்டத்தில் திண்டிவனம், விக்கிரவாண்டி, கோலியனூா், வளவனூா்,திருவெண்ணெய்நல்லூா், கண்டாச்சிபுரம், அரண்டநல்லூா், மயிலம், வானூா், ஒலக்கூா், கண்டமங்கலம், மரக்காணம், கோட்டக்குப்பம், செஞ்சி, மேல்மலையனூா், வல்லம் என மாவட்டத்தின் பிற பகுதிகளைச் சோ்ந்த ஐயப்ப பக்தா்களும் திங்கள்கிழமை மாலை அணிந்து விரதம் தொடங்கினா்.

X
Dinamani
www.dinamani.com