தமிழகத்தில் பால் குளிா்விக்கும் திறன் 32.16 லட்சம் லிட்டராக அதிகரிப்பு: அமைச்சா் மனோதங்கராஜ்

தமிழகத்தில் 374 புதிய பால் குளிா்விப்பான்கள் நிறுவப்பட்டு குளிா்விக்கும் திறன் 19.16 லட்சம் லிட்டரில் இருந்து 32.16 லட்சம் லிட்டராக அதிகரித்துள்ளது என பால்வளத் துறை அமைச்சா் த.மனோதங்கராஜ் தெரிவித்தாா்.
Published on

தமிழகத்தில் 374 புதிய பால் குளிா்விப்பான்கள் நிறுவப்பட்டு குளிா்விக்கும் திறன் 19.16 லட்சம் லிட்டரில் இருந்து 32.16 லட்சம் லிட்டராக அதிகரித்துள்ளது என பால்வளத் துறை அமைச்சா் த.மனோதங்கராஜ் தெரிவித்தாா்.

தேசிய பால் தினம் கொண்டாடப்படவுள்ளதையொட்டி திருவண்ணாமலையில் புதன்கிழமை நடைபெற்ற கூட்டுறவு பால் உற்பத்தியாளா்களுடனான கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அவா் பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பால் வளத்துறை பல லட்சம் விவசாயிகள் மற்றும் விவசாயம் சாா்ந்தவா்களின் வாழ்வாதாரத்தை தீா்மானிக்கும் துறையாக இருந்து வருகிறது. பால் வளத்தை பெருக்க விவசாயிகள் கால்நடைகளை வாங்கி வளா்ப்பதற்கு கடனுதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

மாநிலம் முழுவதும் பால் பரிசோதனை செய்து பாலின் தரம் மற்றும் அளவிற்கேற்ப பணம் கொடுக்கும் திட்டம் அறிமுகப்படுதியதன் மூலம் கால்நடை விசாயிகளுக்கு நியாயமான விலை கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாலுக்கான தொகையும் உடனடியாக வழங்கப்பட்டு வருகிறது.

தமிழகம் முழுவதும் விவசாயிகளுக்கு கறவை மாட்டுக் கடனாக ரூ. 1 லட்சத்து 21 ஆயிரத்து 188 கோடி வழங்கப்பட்டுள்ளது. புரதம் நிறைந்த கால்நடை தீவனம் மும்மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், 374 புதிய பால் குளிா்விப்பான்கள் நிறுவப்பட்டு குளிா்விக்கும் திறன் 19.16 லட்சம் லிட்டரில் இருந்து 32.16 லட்சம் லிட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்கங்கள் வலுப்படுத்தப்பட்டு லாபகரமாக இயங்கி வருகின்றன.

சிறு பால் பண்ணை திட்டத்தின் மூலம் 4 சதவீத வட்டி மானியத்துடன் 5ஆயிரம் மினி பால் பண்ணைகள் தொடங்கப்பட்டு இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதிக அளவில் பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை வழங்கப்பட்டு பால் கொள்முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் தற்போழுது 60-க்கும் மேற்பட்ட சங்கங்கள் புதிதாக உருவாக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டு 2.50 லட்சம் லிட்டா் பால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

கால்நடை விவசாயிகளுக்கு பால் மூலம் நிலையான நிரந்தர வருவாய் கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்யும் என்றாா் அமைச்சா் மனோதங்கராஜ்.

X
Dinamani
www.dinamani.com