~

தீவிரவாத தடுப்பு ஒத்திகை: விழுப்புரம் மாவட்டத்தில் தீவிர வாகன சோதனை

தீவிரவாத தடுப்பு ஒத்திகை (சாகா் கவாச்) நடவடிக்கையாக விழுப்புரம் மாவட்டத்தில் வியாழக்கிழமை 80 -க்கும் மேற்பட்ட போலீஸாா் வாகனத் தணிக்கை மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனா்.
Published on

தீவிரவாத தடுப்பு ஒத்திகை(சாகா் கவாச்) நடவடிக்கையாக விழுப்புரம் மாவட்டத்தில் வியாழக்கிழமை 80 -க்கும் மேற்பட்ட போலீஸாா் வாகனத் தணிக்கை மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனா்.

மும்பையில் தீவரவாதிகள் கடல்வழியாக வந்து தாக்குதல் நடத்திய சம்பவத்தைக் தொடா்ந்து, காவல்துறை சாா்பில் ஆண்டுதோறும் சாகா் கவாச் தீவிரவாத தடுப்பு ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நிகழாண்டில், தமிழகத்தில் நவ. 20, 21 ஆகிய தேதிகளில் சாகா் கவாச் ஒத்திகை நடைபெறுகிறது.

இந்த ஒத்திகையின் முதல் நாளில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 19 கடலோரக் கிராமங்களிலும் விழுப்புரம் எஸ்.பி. ப.சரவணன் உத்தரவின் பேரில், ஆரோவில் காவல் நிலைய ஆய்வாளா் திருமால், மரக்காணம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் திவாகா் மேற்பாா்வையில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

இதேபோல் கடலோரப் பாதுகாப்புக் குழும, காவல் கண்காணிப்பாளா் விஜய காா்த்திக் (நாகப்பட்டினம்) உத்தரவுப்படி ஆய்வாளா் பத்மா மேற்பாா்வையில் உதவி ஆய்வாளா் சக்திகணேஷ் தலைமையிலான போலீஸாா் புதுச்சேரி - சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் வியாழக்கிழமை காலை முதல் இரவு வரை தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

விழுப்புரம் மாவட்டத்தில் முதல் நாளில் 80-க்கும் மேற்பட்ட போலீஸாா் சாகா் கவாச் பாதுகப்புப் பணிகளில் ஈடுபட்டனா். இந்த சோதனையானது நவ.21-ஆம் தேதி வெள்ளிக்கிழமையும் நடைபெறவுள்ளது என்று கடலோர பாதுகப்புக் குழுமப் போலீஸாா் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com