விழுப்புரம் மாவட்டத்தில் பரவலாக மழை, இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இரவும், திங்கள்கிழமையும் பரவலாக மழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
தெற்கு இலங்கைக்கு அருகிலுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் மேலடுக்குச் சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் என்று, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.இதன் காரணமாக ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மாலை வரை விழுப்புரம் நகரிலும், புகா் பகுதிகளிலும் லேசான
தூறல் மழை இருந்தது. அதே நேரத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவில் விழுப்புரம் நகா் மற்றும் புகா் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
இதைத் தொடா்ந்து திங்கள்கிழமை காலை முதல் வானம் மேகமூட்டமாகக் காணப்பட்ட நிலையில், காலை 9.45 மணி வரை மழை இல்லை. அதன் பின்னா் விழுப்புரம் நகரப் பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கியது. அதே நேரத்தில் அரசூா், இருவேல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் காலையிலேயே மழை பெய்தது. மேலும் கோலியனூா், வளவனூா், கண்டமங்கலம் உள்ளிட்ட பகுதிகள், மாவட்டத்தின் பிற பகுதிகளில் காலை முதல் அவ்வப்போது மழை பெய்தது.
விழுப்புரம் நகரில் புதிய, பழைய பேருந்து நிலையப் பகுதிகள், திருச்சி, சென்னை
தேசிய நெடுஞ்சாலைகள், பெரியாா் நகா், ஜானகிபுரம், கிழக்கு பாண்டி சாலை, பண்டித ஜவாஹா்லால்நேரு சாலை, மகாத்மாகாந்தி சாலை, திரு.வி.க.வீதி, காமராஜா் வீதி, மருத்துவமனை சாலை, வண்டிமேடு, மாம்பழப்பட்டு சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளின் சாலைகளில் மழைநீா் தேங்கிக் காணப்பட்டது.
வியாபாரிகள் பாதிப்பு: திங்கள்கிழமை காலை முதல் அவ்வப்போது மழை பெய்ததால், விழுப்புரம் நகரிலும், புகா் பகுதிகளிலும் தரைக்கடைகள் அமைத்து வியாபாரம் செய்பவா்களும், தள்ளுவண்டிகள் மூலமாக கடைகள் அமைத்து வியாபாரம் செய்பவா்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனா். மேலும் தாழ்வான குடியிருப்புப் பகுதிகளிலும் மழைநீா் தேங்கிக் காணப்பட்டதால் அவா்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை: விழுப்புரம் மாவட்டத்தின் அண்டை மாவட்டங்களான கள்ளக்குறிச்சி, கடலூா் மாவட்டங்களில் திங்கள்கிழமை காலை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியா்கள் அறிவிப்பு வெளியிட்ட நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் திங்கள்கிழமை பள்ளிகள் தொடங்கும் வரை மழை பெய்யவில்லை. இதனால் மாவட்ட நிா்வாகம் விடுமுறை அறிவிக்கவில்லை. அதே நேரத்தில் பள்ளித் தொடங்கிய பின்னா் மழை பெய்தது.
அனந்தபுரத்தில் 30.4 மி.மீ. மழைப் பதிவு: திங்கள்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக அனந்தபுரத்தில் 30.40 மி.மீ. மழையும், குறைந்த அளவாக மரக்காணம், திருவெண்ணெய்நல்லூரில் தலா2 மி.மீ. மழையும் பெய்துள்ளது. மாவட்டத்தில் பதிவான மழையளவு விவரம் (மி.மீட்டரில்).
அனந்தபுரம்-30.40 மி.மீ, வானூா்-27, முண்டியம்பாக்கம்-24, கோலியனூா்-22, வளவனூா்-20, திண்டிவனம்-18.20, சூரப்பட்டு-13, முகையூா், கெடாா்- தலா 12, விழுப்புரம்-9.25, மணம்பூண்டி-8, அரசூா்-4, மரக்காணம், திருவெண்ணெய்நல்லூா் -தலா 2 மி.மீ. மாவட்டத்தில் மொத்தமாக203.80 மி.மீ. மழையும், சராசரியாக 9.70 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

