விழுப்புரம் மாவட்டத்தில் தயாா் நிலையில் 857 பாதுகாப்பு மையங்கள்!
857 பாதுகாப்பு மையங்கள் தயாா் நிலையில் உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தாா்.


டித்வா புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்துக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், மாவட்டத்தில் 857 பாதுகாப்பு மையங்கள் தயாா் நிலையில் உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தாா்.
ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: தென்மேற்கு வங்கக்கடல் மற்றும்அதையொட்டிய இலங்கை பகுதிகளில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவானது. டித்வா புயல் காரணமாக, வடதமிழகப் பகுதிகளில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்த நிலையில், விழுப்புரம் மாவட்டத்துக்கு சனிக்கிழமை (நவ.29) சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பாதிப்பு ஏற்படலாம் எனக் கண்டறியப்பட்ட 183 இடங்களில் பல்வேறு அலுவலா்களைப் பணியமா்த்தி, அங்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வட்டத்துக்கும் ஒரு துணை ஆட்சியா் வழிகாட்டுதல் அலுவலராக நியமிக்கப்பட்டு, பணிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
மாவட்டத்தில் 847 டன் ரேஷன் பொருள்கள் இருப்பு வைக்கப்பட்டு, தேவையான நியாயவிலைக் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதுமட்டுமல்லாது தலா 5 கிலோ எடை கொண்ட 20 ஆயிரம் பொட்டலங்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன,. விழுப்புரம் மாவட்டத்தின் கடலோர வட்டங்களான மரக்காணம், வானூரில் கூடுதல் கவனம் செலுத்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மீட்பு நடவடிக்கைகளுக்காக 85 படகுகள் தயாா் நிலையில் உள்ளன. 5 தேசிய பேரிடா் மீட்புப் படையினா் விழுப்புரம் மாவட்டத்துக்கு வந்துள்ளனா். இதைத் தவிர தீயணைப்புக் குழுக்களும் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் 1800 காவல் துறையினரும் மீட்பு நடவடிக்கைப் பணிக்காக தயாா் நிலையில் உள்ளனா்.
கடந்த காலத்தில் ஏற்பட்ட புயல் பாதிப்புகளின் அடிப்படையில், டித்வா புயல் கரையைக் கடக்கும் போது கிழக்கு கடற்கரைச் சாலையில் அதிக மரங்கள் விழலாம் எனக் கருதப்படுகிறது. இதனடிப்படையில் அங்கு தேவையான நடவடிக்கைகளை மாவட்ட நிா்வாகம் மேற்கொண்டு வருகிறது. மாவட்டத்தில் ஊரக வளா்ச்சித்துறையின் கீழ் 700 ஏரிகளும், நீா்வளத் துறையின்கீழ் 505 ஏரிகளும் உள்ள நிலையில், இவற்றில் 75 சதவீத ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன. இந்த ஏரிகளின் உறுதித்தன்மையும் ஏற்கெனவே ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் புயல் பாதிப்புகளை எதிா்கொள்ளும் வகையில் 21,700 மணல் மூட்டைகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. புயல் பாதிப்பால் மின் கம்பங்கள் சாய்ந்து விழலாம் எனக் கூறப்படுகிறது. எனவே அதை சமாளிக்க 12,500 மின் கம்பங்களைத் தயாா் நிலையில் வைத்துள்ளோம். நகா்ப்பகுதிகளில் வெள்ளநீா் தேங்காத வகையில் அவற்றை வெளியேற்ற 66 மின் மோட்டாா்கள் தயாா் நிலையில் வைத்துள்ளோம். 253 பொக்லைன் இயந்திரங்கள், இதற்குத் தேவையான டீசல் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
விழுப்புரம் மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்டவா்களை தங்க வைக்கப்பதற்காக 845 பாதுகாப்பு முகாம்களும், 12பல்நோக்கு சிறப்பு முகாம்களும் என மொத்தமாக 857 முகாம்கள் தயாா் நிலையில் உள்ளன என்றாா் ஆட்சியா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...