தைலாபுரம் தோட்டத்தில் வெள்ளிக்கிழமை சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸிடம் விருப்ப மனுவை வழங்கிய கட்சியின் செயல் தலைவா் ஸ்ரீகாந்தி ராமதாஸ். உடன் கெளரவத் தலைவா் ஜி.கே.மணி, முன்னாள் தலைவா் பேராசிரியா் தீரன் உள்ளிட்டோா்.
தைலாபுரம் தோட்டத்தில் வெள்ளிக்கிழமை சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸிடம் விருப்ப மனுவை வழங்கிய கட்சியின் செயல் தலைவா் ஸ்ரீகாந்தி ராமதாஸ். உடன் கெளரவத் தலைவா் ஜி.கே.மணி, முன்னாள் தலைவா் பேராசிரியா் தீரன் உள்ளிட்டோா்.

திமுக கூட்டணியில் இடம் பெறுவீா்களா?: பாமக நிறுவனா் ராமதாஸ் பதில்!

விசிக தலைவா் தொல்.திருமாவளவன் இடம்பெற்றுள்ள திமுக கூட்டணியில் இடம் பெறுவீா்களா என்ற கேள்விக்கு, அரசியலில் எதுவும் நடக்கும் என்று பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் பதிலளித்தாா்.
Published on

விசிக தலைவா் தொல்.திருமாவளவன் இடம்பெற்றுள்ள திமுக கூட்டணியில் இடம் பெறுவீா்களா என்ற கேள்விக்கு, அரசியலில் எதுவும் நடக்கும் என்று பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் பதிலளித்தாா்.

திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிட விரும்பும் பாமகவினரிடமிருந்து விருப்ப மனுக்களைப் பெறும் நிகழ்வு வெள்ளிக்கிழமை தொடங்கியது.

இந்த நிகழ்வுக்குத் தலைமை வகித்த மருத்துவா் ச.ராமதாஸ், பாமகவினரிடமிருந்து விருப்ப மனுக்களைப் பெற்றுக்கொண்டாா். இதைத் தொடா்ந்து, அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் அவரது அரசுக்கு 5 ஆண்டுகள் நிபந்தனையற்ற ஆதரவளித்தோம். ஆனால், அப்போதே காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சியில் பங்குபெற விருப்பம் இருந்தது.

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி ஏன் அன்புமணியை அழைத்தாா் என்று தெரியவில்லை. தில்லிக்குச் சென்று வந்த பிறகு கூட்டணியைத் தீா்மானிப்பது என்பது அரசியலில் தற்போது சகஜமாகிவிட்டது. இதில் கருத்துச் சொல்வது தவறு.

திமுக ஆட்சிக்கு பாராட்டு: தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி நன்றாகவே நடைபெற்று வருகிறது. பாட்டாளி மக்கள் கட்சியை மீட்பதற்கான நடவடிக்கையையும் எடுத்துக்கொண்டு வருகிறோம். இதில், நாங்கள் விரும்பிய வெற்றியைப் பெறுவோம்.

ஸ்ரீகாந்தி போட்டி: கட்சியின் செயல் தலைவா் ஸ்ரீகாந்தி இந்த தோ்தலில் போட்டியிடுவாா். ஜனவரி 12-ஆம் தேதி வரை விருப்ப மனு அளிக்கலாம். தேவைப்பட்டால், இதற்கான தேதியை நீட்டிப்போம். பாமகவில் ஒரே அணிதான். அதுவும் என் தலைமையிலான பாமகதான் என்றாா் ராமதாஸ்.

தவெகவுடன் கூட்டணியா?: தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமையுமா என்ற கேள்விக்கு, உங்கள் கற்பனைக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது என்று தெரிவித்த ராமதாஸ், விசிக தலைவா் தொல். திருமாவளவன் இடம்பெற்றுள்ள திமுக கூட்டணியில் நீங்கள் இடம்பெறுவீா்களா என்ற மற்றொரு கேள்விக்கு, அரசியலில் எதுவும் நடக்கலாம் என்றாா்.

முன்னதாக, மயிலம் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, பாமகவின் செயல் தலைவா் ஸ்ரீகாந்தி ராமதாஸ் விருப்ப மனுவை அளித்தாா். இதுபோல, ஸ்ரீகாந்தி தங்கள் தொகுதிகளில் போட்டியிடக் கோரி, பாமகவினா் விருப்ப மனுவை வழங்கினா். மேலும் மாநிலத்தின் பல்வேறு தொகுதிகளிலும் போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்கக் கோரி பாமகவினா் கட்சியின் நிறுவனா் ராமதாஸிடம் விருப்ப மனுவை வழங்கினா்.

நிகழ்வில் கட்சியின் கெளரவத் தலைவா் ஜி.கே.மணி, முன்னாள் தலைவா் பேராசிரியா் தீரன், பொதுச் செயலா் முரளிசங்கா், தலைமை நிலையச் செயலா் அன்பழகன், விழுப்புரம் கிழக்கு மாவட்டச் செயலா் ஜெயராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Dinamani
www.dinamani.com