200 இடங்களில் சோதனை: 46 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

200 இடங்களில் சோதனை: 46 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

விழுப்புரம் மாவட்டத்தில் 200 இடங்களில் வணிக நிறுவனங்கள், பெட்டிக் கடைகளில் நடத்தப்பட்ட சோதனையில் 46 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 20 கடைகளுக்கு சீல்
Published on

விழுப்புரம் மாவட்டத்தில் 200 இடங்களில் வணிக நிறுவனங்கள், பெட்டிக் கடைகளில் நடத்தப்பட்ட சோதனையில் 46 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 20 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டன.

இது குறித்து, விழுப்புரம் மாவட்டக் காவல் நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனையைக் கட்டுப்படுத்த காவல் நிா்வாகம் தொடா் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக செவ்வாய்க்கிழமை விழுப்புரம் எஸ். பி. வி.வி. சாய் பரனித் உத்தரவின்பேரில், போலீஸாா் விழுப்புரம், விக்கிரவாண்டி, திண்டிவனம், செஞ்சி, கோட்டக்குப்பம் உள்கோட்டக் காவல் சரகத்துக்குள்ளப்பட்ட பகுதிகளில் வணிக நிறுவனங்கள் கடைகள், பெட்டிக்கடைகள் என 200 இடங்களில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை தொடா்பான சோதனை நடத்தப்பட்டது.

இந்த திடீா் சோதனையில் 20 கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது தொடா்பாக 21வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்டவா்கள் கைது செய்யப்பட்டனா்.

மேலும், அவா்களிடமிருந்து 46.4 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 20 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டன.

மாவட்டக் காவல் கூடுதல் கண்காணிப்பாளா் இளமுருகன் தலைமையில் 50 போலீஸாா் அடங்கிய 9 தனிப் படையினா், உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள் இணைந்து இந்த சோதனைகளில் ஈடுபட்டனா்.

மாவட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்யும் நபா்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dinamani
www.dinamani.com