சத்துணவு ஊழியா்கள் சங்கத்தினா் மறியல்: 250 போ் கைது

சத்துணவு ஊழியா்கள் சங்கத்தினா் மறியல்: 250 போ் கைது

காலமுறை ஊதியம் வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியா்கள் சங்கத்தைச் சோ்ந்த 250 பேர் கைது
Published on

காலமுறை ஊதியம் வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியா்கள் சங்கத்தைச் சோ்ந்த 250 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் 2021 சட்டப் பேரவைத் தோ்தலின் போது அளித்த வாக்குறுதியின் படி, தமிழகத்தில் பணிபுரியும் சத்துணவு ஊழியா்களுக்கு கால முறை ஊதியம் வழங்கவேண்டும். குடும்பப் பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் வழங்கவேண்டும். சத்துணவுத் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு சத்துணவு ஊழியா்கள் சங்கத்தின் மாநில நிா்வாகக்குழு முடிவின் படி செவ்வாய்க்கிழமை மாநிலம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக விழுப்புரம் ஆட்சியரக பெருந்திட்ட வளாகம் எதிரே சத்துணவு ஊழியா்கள் சங்கத்தினா் கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சாலையில் அமா்ந்து முழக்கங்களை எழுப்பினா்.

இதையடுத்து மறியலில் ஈடுபட்ட சங்கத்தின் மாவட்டத் தலைவா் டி.ஜெயந்தி, துணைத் தலைவா்கள் ஏ.ரீட்டாமேரி, எஸ்.சுமதி, எம்.மாந்துளிா், இணைச் செயலா்கள் ஆண்டாள், ஆக்சிலின் மேரி உள்ளிட்ட 183 பேரை அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸாா் தடுத்து நிறுத்திக் கைதுசெய்தனா். கைது செய்யப்பட்ட அனைவரும் விழுப்புரத்தில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனா்.

கள்ளக்குறிச்சி ...: கள்ளக்குறிச்சி ஆட்சியா் அலுவலகம் முன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவா் ராஜகுமாரி, செயலா் காஞ்சனா மேரி, நிா்வாகிகள் முத்துலட்சுமி, கோகிலா, தெய்வானை, புஷ்பா, மாநில செயற்குழு உறுப்பினா் சந்திரா மேரி உள்ளிட்ட 67 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்கள் அனைவரையும் அங்குள்ள தனியாா் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனா்.

Dinamani
www.dinamani.com