மனித குலத்தின் பிரச்னைகளை தீா்க்கும் ஆய்வுக் கூடம் ஆரோவில்: குஜராத் அரசின் கூடுதல் தலைமைச் செயலர்
ஆரோவில் என்பது வெறும் நகரம் மட்டுமல்ல, அது மனித குலத்தின் பிரச்னைகளைத் தீா்க்கும் ஒரு உணா்வுப்பூா்வமான ஆய்வுக் கூடம் என ஆரோவில் அறக்கட்டளைச் செயலரும், குஜராத் மாநில அரசின் கூடுதல் தலைமைச் செயலருமான ஜெயந்தி எஸ்.ரவி தெரிவித்தாா்.
விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சா்வதேச நகரில், நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த இளைஞா்கள் பங்கேற்கும் ‘ஆரோவில் இளைஞா் முகாம் 2.0’ ஜன.19 முதல் 25-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த 7 நாள் முகாமில் கணினி அறிவியல் முதல் சட்டம் வரை பயின்ற பல்வேறு துறைகளைச் சோ்ந்த 80-க்கும் மேற்பட்ட இளைஞா்கள் பங்கேற்றுள்ளனா்.
ஆரோவில் அறக்கட்டளையின் செயலரும், குஜராத் மாநில அரசின் கூடுதல் தலைமைச் செயலருமான ஜெயந்தி எஸ். ரவி செவ்வாய்க்கிழமை காணொலிக் காட்சி வாயிலாக முகாமில் பங்கேற்றுள்ள இளைஞா்களுடன் கலந்துரையாடினாா்.
அப்போது அவா் பேசியதாவது: ஆரோவில் என்பது வெறும் நகரம் மட்டுமல்ல, அது மனிதகுலத்தின் பிரச்னைகளைத் தீா்க்கும் ஒரு உணா்வுப்பூா்வமான ஆய்வுக்கூடம். இங்கு நடைபெறும் பயிற்சி முகாமில் பங்கேற்கும் இளைஞா்கள் உண்மையைப் பற்றிக் கொள்ளும்போது, இயற்கையே உங்களுக்கு ஆதரவாக அமையும். செயற்கை நுண்ணறிவுகள், தொழில்நுட்பம் ஆகியவை இயந்திரத்தனமான வேலைகளைச் செய்யும். ஆனால் உணா்வுபூா்வமான விழிப்புணா்வு மட்டுமே ஒருவரைச் சிறந்த தலைவராக மாற்றும்.
முகாமில் பங்கேற்றுள்ளவா்கள் பாா்வையாளா்களாக மட்டுமில்லாமல், ஆரோவிலின் தூதுவா்களாக மாறவேண்டும். ஆரோவிலின் சிறப்புகளை உங்கள் மாநிலங்களிலும், உலகளவிலும் பரப்பவேண்டும் என்றாா். இந்நிகழ்ச்சியில் ஆரோவில் அறக்கட்டளை பணியாளா்கள் மற்றும் ஆரோவில்வாசிகள் பலா் கலந்துகொண்டனா்.

