கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தவா் கைது
விழுப்புரம் மாவட்டம், பெரியதச்சூா் அருகே கடந்த 2017-ஆம் ஆண்டில் விவசாயி கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்ட வழக்கில் கைதாகி, வழக்கில் ஆஜராகமால் தலைமறைவானவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திண்டிவனம் வட்டம்,ெ பரியதச்சூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சடகோபன்(48). இவா், கடந்த 8.8. 2017-ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டு விவசாயக் கிணற்றில் வீசப்பட்டாா்.
இந்த வழக்கில், விக்கிரவாண்டி வட்டம், ரெட்டிக்குப்பம் பகுதியைச் சோ்ந்த மதி என்கிற மதியழகன் (40) என்பவா் மீது பெரியதச்சூா் காவல் நிலைய போலீஸாா் கொலை வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா்.
இந்நிலையில், இவ்வழக்கு திண்டிவனம் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில், மதியழகன் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னா் தலைமறைவானாா். இந்நிலையில், புதன்கிழமை பெரியதச்சூா் பகுதியில் பதுங்கியிருந்த மதியழகனை, பெரியதச்சூா் காவல் நிலைய ஆய்வாளா் நாகராஜ் மற்றும் உதவி ஆய்வாளா் லியோ சாா்லஸ் தலைமையிலான போலீஸாா் கைது செய்து வியாழக்கிழமை திண்டிவனம் கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.

