பாலியல் வன்முறை, போதைப்பொருள் புழக்கம், சாதி-மதவெறிக்கு எதிராக, விழுப்புரத்தில் அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தினா் கையொப்ப இயக்கத்தை திங்கள்கிழமை நடத்தினா்.
பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள், இணையவழிக் குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும், போதைப்பொருள்கள் விற்பனையில் ஈடுபடுவோரைக் குண்டா் தடுப்புக் காவல்சட்டத்தின்கீழ் கைது செய்ய வேண்டும், கல்வி நிலையங்களில் சாதி ஒழிப்புக்காக ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு அளித்த 73 பரிந்துரைகளையும் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழகத்தில் ஒரு கோடி பேரிடம் கையொப்பம் பெறும் இயக்கத்தை அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் ஜூலை 5-ஆம் தேதி தொடங்கி 25-ஆம் தேதி வரை நடத்தவுள்ளது.
இதைத் தொடா்ந்து விழுப்புரம் மாவட்டம் சாா்பில் கையொப்ப இயக்கம் திங்கள்கிழமை நடைபெற்றது. விழுப்புரம் நகராட்சித் திடலில் நடைபெற்ற இந்த இயக்கத்துக்கு இளைஞா் பெருமன்றத்தின் மாவட்டப் பொருளாளா் கே.காத்தவராயன் தலைமை வகித்தாா். கண்டமங்கலம் ஒன்றியச் செயலா் எஸ்.விமல்ராஜ், பொருளாளா் எல்.பிரவீனா முன்னிலை வகித்தனா்.
விழுப்புரம் நகா்மன்றத் தலைவா் எஸ்.தமிழ்ச்செல்வி பிரபு கையொப்பமிட்டு, இந்த இயக்கத்தை தொடங்கி வைத்தாா். அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தின் மாநிலச் செயலா் பா.தினேஷ் சிறப்புரையாற்றினாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் ஆ.செளரிராஜன், நிா்வாகிகள் வி.கிருத்திகா, ஆா்.கோபி, குணபாலன் உள்ளிட்டோா் நிகழ்வில் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








