கரடிக்கு ஆப்பிள், பறவைக்கு டானிக், குரங்குக்கு போர்வை!
குளிர்காலம் அதிகரித்து வருவதால், தில்லியில் ஸ்வெட்டர்களின் விற்பனை


குளிர்காலம் அதிகரித்து வருவதால், தில்லியில் ஸ்வெட்டர்களின் விற்பனை விறுவிறுப்பாகி வருகிறது. குளிரிலிருந்து தங்களை சமாளித்துக் கொள்ள தில்லிவாசிகள் பல வகைகளிலும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
மனிதர்களே குளிரில் நடுங்கிக் கொண்டிருக்கும் நிலையில், சுற்றுலாப் பயணிகளை வெகுவாக ஈர்த்துவரும் தில்லி தேசிய உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளும், பறவைகளும் குளிரை எவ்வாறு சமாளிக்கின்றன என்பதை தெரிந்து கொள்வது சுவையான செய்திதான்.
புராண கிலா கோட்டையை ஒட்டி அமைந்துள்ள இந்த உயிரியல் பூங்காவில் 123 வகையான பறவைகளும், விலங்குகளும் உள்பட 1,500 வன உயிரினங்கள் பராமரிக்கப்படுகின்றன.
தற்போது குளிர்காலம் என்பதால், இங்கு விடுமுறை நாள்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது.
இங்கு பனியின் தாக்கத்திலிருந்தும், குளிரிலிருந்தும் விலங்குகளையும், பறவைகளையும் பாதுகாக்கும் வகையில் அவற்றின் வாழிடங்கள் மற்றும் அவற்றுக்கு வழங்கப்படும் உணவு உள்ளிட்டவற்றில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
பூங்காவில் உள்ள ரீட்டா, ரோஹன் ஆகிய மனித குரங்களுக்கு குளிரைத் தாங்கும் வகையில் கம்பளிப் போர்வை அளிக்கப்பட்டுள்ளது. அறை சூடாக இருக்கும் வகையில் வெப்பத்தை வெளியிடக்கூடிய விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. ஹீட்டரும் பொருத்தப்பட்டுள்ளது.
விலங்குகள் தங்குமிடங்களில் குளிர்காற்று உள்ளே செல்லாமல் இருக்கும் வகையில் வழக்கமாக தார்ப்பாய், கோணிப்பை ஆகியவை போடப்படும். தற்போது குளிர்காற்று புகாமல் இருக்கும் வகையில் கண்ணாடிகளால் ஜன்னல்கள் அடைக்கப்பட்டுள்ளன.
இது குறித்து, "தினமணி' செய்தியாளரிடம் பூங்காவின் வன விலங்கு மூத்த மருத்துவர்
ந. பன்னீர் செல்வம் கூறியதாவது:
புலி, சிங்கம் வாழிடங்களில் வெப்பக்காற்றுக்கான கருவிகள் வைக்கப்பட்டுள்ளன. மாலை நேரம் முதல் காலை வரை இக்கருவிகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை வெயிலில் குறிப்பிட்ட நேரம் வரை
விலங்குகள் உலவுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிங்கம், புலிக்கு அதிக உணவு
குளிர்காலத்தில் சிங்கம், புலி ஆகியவை இறைச்சியை வழக்கத்திற்கு மாறாக அதிகமாக உட்கொள்ளும். அதனால்,
அவற்றுக்கு 2 கிலோ கூடுதல் இறைச்சி கொடுக்கப்பட்டு வருகிறது.
வெளிமாநிலங்களில் இருந்து பூங்காவுக்கு வந்துள்ள வண்ண நாரைகள் (பெயிண்டட் ஸ்டார்க்) முட்டையிட்டு குஞ்சு பொறித்து வருவதால் அவற்றுக்கு வழங்கப்படும் மீன் குஞ்சுகளின் அளவு, வழக்கமான 60 கிலோ முதல் 70 கிலோவில் இருந்து, தற்போது 100 கிலோ முதல் 110 கிலோவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
முதலைக்கு உணவு குறைப்பு
குளிர்காலத்தில் முதலைகள் அவ்வளவாக உணவு உட்கொள்ளாது. அதனால், அவற்றுக்கு வழக்கமாக அளிக்கப்பட்டுவரும் மீன் உணவு நிறுத்தப்பட்டுள்ளது.
மலைப்பாம்பு, குளிர்காலத்தில் மண்ணுக்குள் புதைந்துகொள்ளும். உணவு சாப்பிடாது. அதனால், அதற்கான உணவும் நிறுத்தப்பட்டுள்ளது.
கோடைகாலத்தில் கரடி, குரங்கு, மனித குரங்கு ஆகியவற்றுக்கு "கீர்' எனும் தயிர், பால், இனிப்பு, சாதம் சேர்த்த உணவு வழங்கப்படும். தற்போது அது நிறுத்தப்பட்டு ரொட்டி வழங்கப்படுகிறது. உருளைக் கிழங்குக்கு பதிலாக சர்க்கரை வள்ளிக்கிழங்கு, ஆப்பிள் ஆகியவை வழங்கப்படுகின்றன.
பூங்காவில் உள்ள மூன்று யானைகளுக்கு, புல்லுக்கு பதிலாக தினமும் 300 கிலோ கரும்பு கொடுக்கப்படுகிறது.
மான்களுக்கு சரிவிகித உணவு அடிப்படையில், நசுக்கப்பட்ட நெல்லிக்காய்களுடன் உணவும் சேர்த்து வழங்கப்படுகிறது. அதில் உள்ள வைட்டமின்-சி, சுவாசக் கோளாறு வராமல் தடுக்கும்.
பறவைகளுக்கு குளிர்ச்சலன தாக்கம் ஏற்படாமல் இருக்கும் வகையில் மல்டி-வைட்டமின், வைட்டமின்-சி கலந்த டானிக் தரப்படுகிறது. புலிகளுக்கு "எலெக்ட்ரால் பவுடர்' கலந்த உணவு தரப்படுகிறது.
பாம்பு கூடாரங்களில்100 வாட்ஸ் "பல்ப்'
பாம்புக் கூடாரங்களில் வைக்கோல் தவிர, பாம்புகள் தங்கும் கூடைகளின் அருகே வெப்பத்தை தரக்கூடிய விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.
துளையிடப்பட்ட மண் பானைகள் வைக்கப்பட்டு சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப 40, 60, 100 வாட்ஸ் குமிழ் பல்புகள் வைக்கப்பட்டுள்ளன.
பாம்பு, மான்கள், பறவைகள் தங்குமிடங்களில் வெப்பத்தன்மை இருக்கும் வகையில் வைக்கோல் போடப்பட்டுள்ளது. குளிர் அதிகரிக்கும் நேரங்களில் அவை சிரமமின்றி உறங்குவதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிப்வரி 15-ம் தேதி வரை இந்த ஏற்பாடுகள் தொடரும் என்று பன்னீர்செல்வம் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...