சுடச்சுட

  

  வேம்பு கலந்த யூரியா உரம் மண்வளத்தை பாதுகாக்கும்: வேளாண்துறை ஆலோசனை

  By கடலூர்,  |   Published on : 10th December 2016 08:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மண்வளத்தைப் பாதுகாக்க வேம்பு கலந்த யூரியா பயன்படுத்தலாம் என்று வேளாண்மைத் துறை ஆலோசனை வழங்கியுள்ளது.
   இதுகுறித்து கடலூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் ரா.சு.மனோகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பயிர்களின் வளர்ச்சியில் தழைச்சத்தின் பங்கு மிகவும் முக்கியமானது. தழைச் சத்தானது பயிர்களுக்கு வளர்ச்சியையும் கூடுதல் மகசூலையும் அளிக்கிறது. பயிர்கள் மற்ற உரங்களைக் காட்டிலும் அதிகளவில் தழைச்சத்து உரங்களை எடுத்துக்கொள்கின்றன.
   தழைச் சத்தினை பயிர்களுக்கு இயற்கை உரங்களை இடுவதன் மூலமும், உயிர் உரங்கள் மூலமும் மற்றும் ரசாயன உரங்கள் ஆகியவற்றின் மூலமாகவும் அளிக்கலாம். இவற்றில் ரசாயன உரங்களால் மட்டுமே பயிருக்குத் தேவையான தழைச் சத்தினை அதிகளவிலும், உடனடியாகவும் வழங்க இயலும். ரசாயன உரங்களில் யூரியா உரம் மூலம் 50 சதவீதம் தழைச்சத்து பயிருக்கு வழங்கப்படுகிறது.
   பயிருக்குத் தேவையான தழைச் சத்தினை வேம்பு பூசாத யூரியா மூலம் அளிக்கும்போது பல்வேறு வழிகளில் ஆவியாகி விரயமாவதுடன், பயிருக்கு குறைந்த அளவே கிடைக்கிறது. மேலும், சுற்றுச் சூழலும் மாசுபடுகிறது. விவசாயிகளுக்கு உரச் செலவும் கூடுதலாகிறது.
   யூரியா உரம் விரயமாவதைத் தடுக்க ஐந்து பங்கு யூரியாவை ஒரு பங்கு வேப்பம்புண்ணாக்கு கலந்து பயன்படுத்த அறிவுரை வழங்கப்பட்டது. இது எளிய முறை என்றாலும் விவசாயிகள் பல்வேறு நடைமுறை காரணங்களால் கடைப்பிடிப்பதில்லை. இதனை கருத்தில் கொண்டு உரத் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களின் யூரியா உரத் தயாரிப்பில் 100 சதவீதம் வேம்பு பூசப்பட்ட யூரியாவினை உற்பத்தி செய்து விநியோகம் செய்ய மத்திய அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
   வேம்பு பூசப்பட்ட யூரியா உபயோகிப்பதனால் பயிர்களுக்கு தேவைக்கேற்ப தழைச்சத்து கிடைக்கிறது. நிலத்தடி நீர் மாசுபடுவது குறைக்கப்படுகிறது. வேம்பானது இயற்கை பூச்சிக் கொல்லியாக செயல்படுகிறது. விவசாயிகளுக்கு மானிய விலையில் கிடைக்கும் வேம்பு பூசப்பட்ட யூரியா, விவசாய உபயோகம் அல்லாமல் வேறு தொழிற்சாலை உபயோகம் அல்லது பால் பொருள்கள் உற்பத்திக்கு செல்வது தடுக்கப்படுகிறது. தற்போது விநியோகிக்கப்படும் யூரியா முழுவதும் வேம்பு பூசப்பட்டுள்ளதால் விவசாயிகள் தனியாக வேம்பு எண்ணெய் கலக்கத் தேவையில்லை.
   எனவே, விவசாயிகள் வேம்பு பூசிய யூரியா உரங்களை மட்டுமே பயன்படுத்தி அதிக மகசூல் பெற்று மண் வளத்தினை பாதுகாக்கலாம் என அதில் தெரிவித்துள்ளார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai