தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிதல்ல : டி.ஆர். பாலுஆர். பி. செளத்ரி உடலுக்கு மம்மூட்டி அஞ்சலி!விஜய்யுடன் தலைமைச் செயலர், டிஜிபி ஆலோசனை!மமதாவுக்கு அகிலேஷ் தொடர் ஆதரவு: வாக்கு எண்ணிக்கை விடியோக்களை வெளியிட வலியுறுத்தல்எந்த சூழலிலும் தவெகவுக்கு ஆதரவு இல்லை: கே.பி. முனுசாமிதமிழ்நாடு 16வது சட்டப்பேரவை கலைப்பு: ஆளுநர் அறிவிப்பு!ஆர்.பி. சௌத்ரி உடலுக்கு விஜய் நேரில் மரியாதை!ஆளுநருடன் விஜய் சந்திப்பு! ஆட்சியமைக்க உரிமை கோரினார்!
/

மழைநீர் சேகரிப்புத் திட்டம் மீண்டும் செயல்பாட்டுக்கு வருமா?

மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Updated On :1 ஏப்ரல் 2017, 7:10 am IST

மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
 தமிழகத்தின் முதல்வராக ஜெ.ஜெயலலிதா 2-ஆவது முறையாக 2001-ஆம் ஆண்டு பொறுப்பேற்றபோது கொண்டுவரப்பட்ட உயரிய திட்டங்களில் ஒன்று கட்டாய மழைநீர் சேகரிப்புத் திட்டம். தமிழகத்தில் பருவமழை பொய்த்தால் ஏற்படும் குடிநீர்ப் பிரச்னை, நிலத்தடி நீர்மட்டம் சரிவைக் கணக்கிட்டு அதனை உயர்த்தும் நோக்கில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டது.
 இதன்படி வீடுகள் உள்ளிட்ட அனைத்துக் கட்டடங்களிலும் கட்டாயமாக மழைநீர் சேகரிப்பு அமைப்பை உருவாக்கியிருக்க வேண்டும். தேவைப்படுவோருக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் இந்தக் கட்டமைப்பை உருவாக்கிக் கொடுக்கும். தவறினால் மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்புத் துண்டிக்கப்படும் என்ற எச்சரிக்கையுடன் இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டது.
இந்தத் திட்டம் செயல்படுத்திய அடுத்த 5 ஆண்டுகளில் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் 50 சதவீதம் வரை நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்ததோடு, நிலத்தடி நீரின் தரமும் உயர்ந்ததாக புள்ளி விவரங்கள் தெரிவித்தன. இதனால் பல்வேறு மாநிலங்களும் பின்பற்றும் வகையில் முன்னோடித் திட்டமாக செயல்பட்ட நிலையில் தற்போது இந்தத் திட்டம் முடங்கியுள்ளது. தற்போதைய கோடைக்காலத்தில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து குடிநீருக்காக பல்வேறு போராட்டங்கள் நடைபெறுகிறது. மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை தொடர்ந்து முறையாகச் செயல்படுத்தியிருந்தால் தற்போதைய அவல நிலையை தவிர்த்திருக்கலாம்.
உதாரணமாக 2015-ஆம் ஆண்டு சென்னை, கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், தூத்துக்குடி உள்பட அனைத்து மாவட்டங்களிலும் பெய்த மொத்த மழைநீரானது 2 ஆண்டுகளுக்கான குடிநீர், விவசாயத் தேவையை பூர்த்தி செய்திருக்கும் என கூறப்பட்டது. ஆனால், 2016-ஆம் ஆண்டின் இறுதியிலேயே குடிநீர்த் தட்டுப்பாட்டை சந்தித்து தற்போது குடிநீர் பஞ்சத்தால் பாதித்து வருகிறோம்.
இதற்கு பல்வேறு காரணங்களைக் கூறலாம். பெருநகரம் முதல் கிராமங்கள் வரை வீடுகள், கட்டடங்கள் அருகருகே கட்டப்படுவது; சிமெண்ட் தளங்கள், தார் சாலைகள் அமைப்பதன் மூலமாக திறந்த மண்வெளி இல்லாத நிலையை உருவாக்கியது; கட்டடங்களின் மேற்கூரையில் பெய்யும் மழைநீரானது நேரடியாக கழிவுநீர் கால்வாயில் செல்லும் வகையிலான கட்டமைப்பு; இதுபோன்றக் காரணங்களால் மழைநீர் பூமியை வந்தடையும் வழிகள் வெகுவாகக் குறைந்துவிட்டன. பெய்யும் மழை நீரில் 5 சதவீதம் அளவுக்குக் கூட நிலத்தால் உறிஞ்சப்படுவதில்லை.
 கடலோர நகரங்களில் நிலத்தினுள் புகும் மழைநீரின் அளவு குறைவதால், ஆழ்குழாய் கிணறுகள் மூலமாக எடுக்கப்படும் நீருடன் கடல் நீரும் கலந்து தற்போது உப்பாக மாறி விடுகிறது. இந்த நிலையைத் தவிர்க்கும் வகையிலேயே தமிழக அரசால் மழைநீர் சேகரிப்பு முறை கட்டாயப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டது. அரசு அலுவலகங்கள் முதல் குடிசை வீடுகள் வரை இந்தத் திட்டம் செயல்பாட்டில் இருந்து வந்தது. பின்னர் வந்த அரசுகள் இந்தத் திட்டத்தில் உரிய கவனம் செலுத்தத் தவறியதால் தற்போது மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் முற்றிலுமாக கைவிடப்பட்ட நிலையிலேயே உள்ளது.
 குடிநீர்த் தட்டுப்பாடு, நிலத்தடி நீர்மட்டம் சரிவு போன்ற பிரச்னைகள் எதிர்காலத்தில் ஏற்படாமல் தடுக்க மழைநீர் சேகரிப்புத் திட்டம் முக்கியத் தேவையாக உள்ளது. எனவே, மழை வடிவில் இயற்கையாகக் கிடைக்கும் நீர் வளத்தை சேமிக்கும் வகையிலும், வருங்காலத்தில் குடிநீர்ப் பஞ்சம் ஏற்படாத வகையிலும் மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை மீண்டும் முழுமையாகச் செயல்படுத்துவதில் தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.