அடிப்படை வசதியில்லாத அரசு தொழில் பயிற்சி நிலையம்
காட்டுமன்னார்கோவிலில் உள்ள அரசு தொழில் பயிற்சி நிலையத்தில், போதிய அடிப்படை வசதியின்றி மாணவர்கள் சிரமப்படுகின்றனர்.


காட்டுமன்னார்கோவிலில் உள்ள அரசு தொழில் பயிற்சி நிலையத்தில், போதிய அடிப்படை வசதியின்றி மாணவர்கள் சிரமப்படுகின்றனர்.
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், அரசு தொழில்பயிற்சி நிலையம் செயல்பட்டு வருகிறது.
ஊராட்சி ஒன்றியத்துக்குச் சொந்தமான திருமண மண்டபத்தில் செயல்படும் இந்த தொழில்பயிற்சி நிலையம், 2015-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இங்கு, சுமார் 200 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
தொழில்பயிற்சி நிலையம் தொடங்கப்பட்ட காலத்தில் கட்டட வசதி இல்லாததால், திருமண மண்டபத்தில் தொடங்கப்பட்டது. ஆனால், தற்போது இரு ஆண்டுகள் கடந்தும் நிரந்தரக் கட்டடம் கட்டப்படவில்லை. இதனால், மாணவர்கள் போதிய இடவசதி இல்லாததால், மற்றொரு கட்டடத்தின் பக்கச் சுவற்றில் டிஜிட்டல் பேனரைக் கொண்டு டென்ட் அமைத்து அமர்ந்து படித்து வருகின்றனர். எனவே, தொழில் பயிற்சி நிலையத்துக்கு தனி கட்டடம் கட்டித்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியர்கள், மாணவர்கள் பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லையாம்.
இந்த நிலையில், வருகிற 18-ஆம் தேதிக்குப் பிறகு மாணவர்களுக்கு தேர்வு நடைபெறுகிறது.
ஆகவே, தேர்வுக்கு கூடுதல் கட்டடம் வேண்டி, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பயன்பாடின்றி பூட்டிக் கிடக்கும் புதிய கட்டடங்களை தாற்காலிகமாக வழங்குமாறு, வட்டார வளர்ச்சி அலுவலரிடம் தொழில் பயிற்சி நிலைய ஆசிரியர்கள் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால், இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதனால், ஆசிரியர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் பரிதவித்து வருகின்றனர். மாணவர்களுக்கு போதிய வசதிகள் இல்லாதது, அவர்களது கல்வியைப் பாதிக்கும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து மாணவர்கள் கூறியதாவது:
தனியார் தொழில் பயிற்சி நிலையத்தில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதால், அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் சேர்ந்தோம். இங்கு உரிய வகுப்பறை வசதி இல்லாததால் மரத்தடி, கட்டடங்களின் நிழல் பகுதி என மாறி, மாறி அமர்ந்து படித்து வருகிறோம். தொழில் பயிற்சி நிலையத்தில் உள்ள கழிப்பறையில் தண்ணீர் வசதி இல்லாததால் பூட்டியே கிடக்கிறது என வேதனையுடன் தெரிவித்தனர்.
இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலரை தொடர்புகொண்டு கேட்டபோது, அவர் பதில் அளிக்க மறுத்துவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...