கடலூர் மாவட்டத்தில் 75 சதவீத முந்திரி உற்பத்தி பாதிப்பு: நிவாரணத்தை எதிர்நோக்கும் விவசாயிகள்

கடலூர் மாவட்டத்தில் நிகழாண்டு முந்திரி உற்பத்தி சுமார் 75 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளதால்,   நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.
Updated on
1 min read

கடலூர் மாவட்டத்தில் நிகழாண்டு முந்திரி உற்பத்தி சுமார் 75 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளதால்,   நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.
கடலூர் மாவட்டத்தில், பண்ருட்டி முந்திரி உலக அளவில் பிரசித்தி பெற்றதாகும். இங்கிருந்து பல்வேறு நாடுகளுக்கு முந்திரி ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் அறுவடையாக வேண்டிய முந்திரி, தற்போது கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது.
மாவட்டத்தில் மொத்தம் சுமார் 72 ஆயிரம் ஏக்கரில் முந்திரி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில், 68,750 ஏக்கர் வரையில் மானாவாரி பயிராகவும், மீதமுள்ள சுமார் 3,250 ஏக்கர் மட்டுமே பாசன வசதியிலுள்ள இடங்களில் சொட்டு நீர் பாசனம் உள்ளிட்ட வசதிகளுடனும் பயிரிடப்பட்டுள்ளது.
2011-ஆம் ஆண்டு வீசிய தானே புயலால் பாதிக்கப்பட்ட மரங்கள் தற்போதுதான் அறுவடைக்குத் தயாராகி வருகின்றன. இதனால், சுமார் 5 ஆண்டுகளாக சொற்ப வருமானம் மட்டுமே ஈட்டி வந்த விவசாயிகள், நிகழாண்டில் அதிகமான விளைச்சல் இருக்கும் என்று நம்பியிருந்தனர். அவர்களின் நம்பிக்கைக்கு ஏற்ற வகையில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் முந்திரி மரங்கள் சிறப்பாகப் பூத்திருந்தன.
ஆனால், மாவட்டத்தில் கடுமையான வறட்சி நிலவியதால் பூக்கள் அனைத்தும் கருகி கொட்டத் தொடங்கின. இதனால், காய்கள் பிடிக்காமல் தற்போது அறுவடை மிகுந்த பாதிப்பைச் சந்தித்துள்ளது. எனவே, விவசாயிகள் தங்கள் பகுதியை வறட்சி பாதித்த பகுதியாக அறிவித்து, உரிய கணக்கெடுப்பை நடத்தி நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.  இதனைத் தொடர்ந்து, தோட்டக்கலைத் துறையினர் முந்திரி பயிரிடப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டனர்.
இதுகுறித்து தோட்டக்கலைத் துறையினர் கூறியதாவது: மாவட்டத்தில் மானாவாரியாக பயிரிடப்படும் முந்திரியில் கடந்தாண்டில் ஏக்கருக்கு 380 கிலோ முந்திரிப் பருப்பு கிடைத்தது. தற்போது 16 கிலோ மட்டுமே கிடைத்துள்ளது.  இது சுமார் 96 சதவீத இழப்பாகும். அதேபோல, பாசனவசதியுள்ள பகுதியில் ஏக்கருக்கு 400 கிலோ முந்திரி கிடைத்து வந்த நிலையில், தற்போது 160 கிலோவாக உற்பத்தி சரிந்துள்ளது. இது சுமார் 60 சதவீத உற்பத்திக் குறைவாகும். மழைப் பொழிவு குறைவாக இருந்ததும், அதிகமான வெப்பத்தாலும் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் நிகழாண்டு சுமார் 70 முதல் 80 சதவீதம் வரையில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கோ.மாதவன் கூறியதாவது: மாவட்டத்தில் நிலவிய கடுமையான வறட்சியால் முந்திரி விவசாயிகள் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளனர்.
எனவே, பண்ருட்டியை வறட்சி பாதித்த பகுதியாக அறிவித்து, முறையாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும். ஏக்கருக்கு ரூ. 50 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். விவசாயிகள் வாங்கிய அனைத்து வகையான கடன்களையும் தள்ளுபடி செய்வதோடு, பயிர்க் காப்பீட்டுத் தொகையும் முழுமையாகக் கிடைத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com