கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே ஆய்வு செய்து வருகிறார்.
அதன்படி, கடலூர் அருகே உள்ள கோண்டூர் சாவடி முதல் கெடிலம் ஆறு வரையிலான வடிநீர் கால்வாய் அமைக்கும் பணியை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே செவ்வாய்க்கிழமை இரவு நேரில் பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:
கடலூர் மாவட்டம் 14 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, மண்டலத்துக்கு ஒரு பொறுப்பு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார். மாவட்டத்தில் 18 புயல் பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அதேபோல, மழைக் காலங்களில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளிலிருந்து மக்களை பாதுகாப்பாக தங்க வைக்கும் பொருட்டு, 191 முகாம்கள் கண்டறியப்பட்டு அந்த முகாம்களில் தேவையான அனைத்து அடிப்படை வசதிகள், உணவு ஆகியவை தங்குதடையின்றி கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. 14 பல்நோக்கு தங்குமிடங்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
மேலும், கடந்த காலங்களில் மழை வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் பொதுப் பணித் துறையினர் மூலம் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அனைத்து ஏரிகள் மற்றும் குளங்களும் வண்டல் மண் எடுக்கும் திட்டத்தின் கீழ், தூர்வாரப்பட்டுள்ளன.
பொதுமக்கள் வடிகால் கட்டமைப்புகளில் குப்பைகளைக் கொட்டக் கூடாது. இதனால், வடிகால் கட்டமைப்புகளில் அடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தரவேண்டும் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.
சார் ஆட்சியர் ஜானிடாம் வர்க்கீஸ், மாவட்ட மேலாளர் (தாட்கோ) ராஜலட்சுமி, பொதுப் பணித் துறை உதவி செயற்பொறியாளர்கள் குமரேசன், கோவிந்தராஜ், வட்டாட்சியர் ப.பாலமுருகன் ஆகியோர் உடனிருந்தனர்.
நெய்வேலியில்...இதேபோல, குறிஞ்சிப்பாடி வட்டத்தில் உள்ள ஆடூர் அகரம் கால்வாய், நடுப்பரவனாறு, செங்கால் ஓடை இணையும் பகுதி, வாலாஜா ஏரி, குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் அலுவலகம் அருகே உள்ள செங்கால் ஓடை ஆகிய பகுதிகளிலும் ஆட்சியர் மு.வடநேரே நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.