மதுக் கடைக்கு எதிர்ப்பு: இரண்டாவது நாளாகப் போராட்டம்
ராமநத்தம் அருகே டாஸ்மாக் மதுக் கடையைத் திறக்க எதிர்ப்புத் தெரிவித்து கிராம மக்கள் இரண்டாவது நாளாக புதன்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை அருகே ராமநத்தத்தை அடுத்துள்ள பனையாந்தூர் கிராமத்தில் டாஸ்மாக் மதுபானக் கடை இயங்கி வந்தது. இந்தக் கடையை அப்புறப்படுத்த வேண்டுமென அப்பகுதி மக்கள் தொடர்ந்து பல்வேறு கட்டப் போராட்டங்களில் ஈடுபட்டு வந்ததைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு மதுக் கடை மூடப்பட்டது.
இந்த நிலையில், பனையாந்தூர் கிராமத்தில் வேறொரு கட்டடத்தில் டாஸ்மாக் மதுக் கடை அமைப்பதற்கான முயற்சியில் மாவட்ட நிர்வாகத்தினர் ஈடுபட்டு வருவதாகத் தெரிகிறது. இதற்கு அப்பகுதியினர் எதிர்ப்புத் தெரிவித்து தங்கள் பகுதியில் மதுக் கடையை அமைக்கக் கூடாதென செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, இரண்டாவது நாளாக புதன்கிழமையும் மதுக் கடையைத் திறப்பதற்காக தேர்வு செய்யப்பட்ட கட்டடத்தின் எதிரே அமர்ந்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். மேலும், மதுக் கடையைத் திறக்க எதிர்ப்புத் தெரிவித்து முழக்கமிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
