சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் வட்டங்களில் பெய்த தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான கே.பாலகிருஷ்ணன் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
கடலூர் மாவட்டம், சிதம்பரம் மற்றும் காட்டுமன்னார்கோவில் வட்டங்களில் கடந்த 8 நாள்களாக மழை பெய்து வருகிறது. இதனால், நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. இந்த நிலையில், கடலூர் மாவட்டத்தின் டெல்டா பகுதி விவசாயிகளின் உயிர் நாடியாக விளங்கும் வீராணம் ஏரி 45.5 அடியை எட்டியுள்ளது.
கடந்த ஒரு மாதத்துக்கு முன் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் வட்டங்களில் நேரடி நெல் விதைப்பு செய்த 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் பயிர்கள் தொடர் மழையால் நீரில் மூழ்கியுள்ளன. இங்குள்ள பாசன வாய்க்கால்களைச் சரியான முறையில் தூர் வாரததால் மழை நீர் தேங்கி நலே பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதையறிந்த சிதம்பரம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. கே.பாலகிருஷ்ணன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட காட்டுமன்னார்கோவில் தொகுதிக்கு உள்பட்ட திருநாரையூர், தவர்த்தாம்பட்டு, நடுத்திட்டு, பிள்ளையார்தங்கல், எடையார் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள வயல்களில் நேரடி நெல் விதைப்பு செய்த வயல்களைப் பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார்.
இதைத் தொடர்ந்து, வீராணம் ஏரியை பார்வையிட்ட பின்னர், செய்தியாளர்கலிடம் அவர் மேலும், கூறியதாவது:
ஏரி முழுக் கொள்ளளவை எட்டாத நிலையில், பொதுப் பணித் துறையினர் ஏரிக்கு வரும் நீரை வீணாக வெள்ளாற்றில் கடலூக்குத் திறந்து விடுகிறார்கள்.
இது கண்டனத்துக்குரியது. தொடர்ந்து, தண்ணீரைத் திறந்துவிட்டால் இன்னும் இரண்டு மாதங்களில் விவசாயிகளுக்குத் தண்ணீர் கிடைக்காத சூழ்நிலை ஏற்படும்.
குமராட்சி முதல் புளியங்குடி வரை உள்ள 7 கி.மீ. தொலைவு கான்சாகிப் வாய்காலைத் தூர்வாரததால்தான் அந்தப் பகுதியில் உள்ள நெல் வயல்களில் மழை நீர் வடிய தாமதம் ஏற்பட்டுள்ளது.
எனவே, அரசு விவசாயிகளின் நலனைக் கருதில் கொண்டு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் கே.பாலகிருஷ்ணன்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பி.கற்பனைச்செல்வம், மாவட்டக் குழு உறுப்பினர் பிரகாஷ், வாஞ்சிநாதன், விவசாயிகள் பி.எஸ்.மகாலிங்கம், பி.வினாயகமூர்த்தி, மூர்த்தி உள்பட பலர் உடன் சென்றனர்.
இதைத் தொடர்ந்து, கே.பாலகிருஷ்ணன் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள டி.நெடுஞ்சேரியில் நடைபெற்ற நவம்பர் புரட்சி தினத்தில் கலந்து கொண்டு கொடியேற்றி, விளக்கவுரையாற்றினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.