தமிழகத்தில் செம்மண் பூமியில் சூரிய ஒளி மின் திட்டம் செயல்படுத்துவதை கைவிட வேண்டும் என சமாஜ்வாதி கட்சியின் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் டெல்டா விஜயன் வெளியிட்ட அறிக்கை:
என்எல்சி இந்தியா நிறுவனம் பூமிக்கடியில் உள்ள இயற்கை வளங்களை கொண்டு மின் உற்பத்தி செய்து வருகிறது. இந்த நிலையில் மரபு சாரா எரிசக்தியை பயன்படுத்தி மின் உற்பத்தி செய்ய வேண்டும் என்ற மத்திய பாஜக அரசின் கொள்கை முடிவால், சூரிய ஒளி மின் திட்டத்தை என்எல்சி நிறுவனம் செயல்படுத்தத் தொடங்கியுள்ளது.
இதற்காக, பசுமையாக காட்சியளித்த பல ஏக்கர் பரப்பளவில் இருந்த மரங்கள் அழிக்கப்பட்டு அங்கு சூரிய ஒளி மின் தகடுகள் பதிக்கப்பட்டு வருகின்றன. இதனால் பசுமை தீர்ப்பாயத்தின் கண்டனத்திற்கும் என்எல்சி உள்ளாகியது.
இந்த நிலையில், செழிப்பான வளமிக்க பூமியான செம்மண் பகுதியை முற்றிலும் வீணாக்கி, அங்கு சூரிய ஒளி தகடுகள் பதிக்கப்படுவதால், சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. வெப்பம் அதிகரிப்பதால், அப்பகுதியில் இயற்கை தன்மை மாறுபடுகிறது. பறவையினங்கள் செத்து மடிகின்றன.
இதுவே அழிவிற்கான அறிகுறிகள் ஆகும். ஏற்கெனவே, நிலக்கரி சுரங்கத்தால் நிலத்தடி நீர் குறைந்து சுற்றுவட்ட கிராமப்புற மக்கள் குடிநீருக்கு அல்லல்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இத்தகைய சூழலில் சூரிய ஒளி மின் திட்டம் கரிசல் மண், தரிசு நிலம் ஆகிய பகுதிகளில் செயல்படுத்தப்பட வேண்டும். மாறாக செழிப்பான, மக்கள் வசிக்கும் பகுதிகள் சூரிய ஒளி தகடுகள் பொருத்துவதை கைவிட வேண்டும்.
ஏற்கெனவே பொருத்தப்பட்ட தகடுகளை உடனடியாக அகற்ற வேண்டும். இந்த திட்டத்தினால், மாவட்டத்தின் மழை வளம் குன்றி, வறண்ட பாலைவனமாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே, என்எல்சி நிறுவனம் சூரிய ஒளி திட்டத்தை நெய்வேலி நகரிய பகுதியில் செயல்படுத்துவதை உடனடியாக கைவிட வேண்டும். இதை தவிர்க்கும் பட்சத்தில் சமாஜ்வாதி கட்சி சார்பில் என்எல்சி தலைமை அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.