ஆசிரியர்களுக்கு தூய தமிழகராதி விநியோகம்
By DIN | Published On : 09th June 2017 07:23 AM | Last Updated : 09th June 2017 07:23 AM | அ+அ அ- |

கடலூர் மாவட்டத்திலுள்ள ஆசிரியர்களுக்கு தூய தமிழகராதி வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் ஆங்கிலச் சொற்களை தமிழ்ச் சொற்கள் போன்றே கையாளும் நிலை பலரிடம் உள்ளது. இதனை மாற்றி அமைத்திட தமிழக அரசு முடிவெடுத்து, செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தை உருவாக்கியுள்ளது. இந்த இயக்ககம் "நற்றமிழ் அறிவோம்' என்ற தலைப்பில் 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கான தூய தமிழகராதி நூலை வெளியிட்டுள்ளது.
இந்த நூல் முதற்கட்டமாக பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்படுகிறது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் உள்ள 1,424 தொடக்க, நடுநிலைப் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு இந்த நூல் வழங்கப்படுகிறது. அரசுப் பள்ளிகளில் தமிழ், ஆங்கிலம் வழியில் கற்கும் மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் வழங்கப்பட்டு வரும் சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொல் இந்த நூலில் உள்ளது.
குறிப்பாக ஆப்பிள் பழம் தமிழில் அரத்தி என்று பதியப்பட்டுள்ளது. மற்ற பொருள்களுக்கான தமிழ் பெயர் (அடைப்புக்குறிக்குள் ஆங்கிலப் பெயர்): ஊதாம்பி (பலூன்), கூராக்கி (ஷார்ப்னர்), தொடரி (ரயில்), கரிக்கோல் (பென்சில்), பனிக்கூழ் (ஐஸ்கிரீம்), வறளப்பம் (ரஸ்க்), இடைவார் (பெல்ட்), உணவடம் (டிபன் பாக்ஸ்), ஒலிவாங்கி (மைக்), கோதடை (சப்பாத்தி), சுண்டாட்டம் (கேரம் விளையாட்டு), திறன்பேசி (செல் போன்), முளரி (ரோஜாப் பூ), மூடணி (ஷூ), வளமனை (பங்களா), ஈருருளி (டூ வீலர்), உலங்கூர்தி (ஹெலிகாப்டர்), காசாள் கருவி (ஏடிஎம்), சீர்வளி (ஏசி இயந்திரம்), சேங்கிழங்கு (பீட்ரூட்), தண்ணாடி (கூலிங் கிளாஸ்), தொடிக்கோல் (ஹாக்கி) இவ்வாறு பல்வேறு சொற்கள் தூய தமிழில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு ஏற்படும் சந்தேகத்துக்கு ஆசிரியர்கள் இந்த நூலின் மூலமாக விளக்கம் அளிக்கும் வகையில் ஆசிரியர்களுக்கும் நூல் வழங்கப்படுவதாக கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.