சிதம்பரம் நடராஜர் கோயிலில் சுதந்திர தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, கிழக்கு கோபுரத்தில் பொது தீட்சிதர்கள் தேசியக் கொடியேற்றினர்.
சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயிலில் 72-ஆவது சுதந்திர தினத்தையொட்டி, பொது தீட்சிதர்கள் புதன்கிழமை காலை 6 மணிக்கு தேசியக் கொடியை வெள்ளித் தட்டில் வைத்து சித்சபையில் உள்ள ஸ்ரீசிவகாம சுந்தரி சமேத ஸ்ரீமந்நடராஜமூர்த்திக்கு அர்ச்சனை மற்றும் தீபாராதனை செய்தனர். பின்னர், மேளதாளங்கள் முழங்க தேசியக் கொடி எடுத்துச் செல்லப்பட்டு, கிழக்கு கோபுரத்தின் உச்சியில் ஏற்றப்பட்டது.
நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து தொடர்ச்சியாக நடராஜர் கோயிலில் பாரம்பரியத்துடன் பொது தீட்சிதர்கள் சார்பில் தேசியக் கொடி ஏற்றுவது வழக்கமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.