அமைச்சர் நிர்மலின் சர்ச்சைக்குரிய பேச்சு நீக்கம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலக பணிக்கான டெண்டர் வெளியீட்டில் விதிமீறல்!மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: மத்திய அமைச்சா் அதவாலே தகவல்எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: டிரம்ப் எச்சரிக்கைதேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!
/

மாற்றுத் திறனாளிகள் வந்து செல்ல சிரமப்படும் கல்வித் துறை அலுவலகம்!

மாற்றுத் திறனாளிகள் எளிதாக வந்து செல்ல முடியாத அளவுக்கு உள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்துகின்றனர்.

Updated On :30 ஜனவரி 2024, 10:08 pm IST

மாற்றுத் திறனாளிகள் எளிதாக வந்து செல்ல முடியாத அளவுக்கு உள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்துகின்றனர்.
 கடலூர் மாவட்டத்தில் சுமார் 1,800 அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. 4 கல்வி மாவட்டங்கள் செயல்பட்டு வரும் நிலையில், அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கான பொறுப்பு அலுவலகமாக முதன்மைக் கல்வி அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
 இந்த அலுவலகம் கடலூர் மஞ்சக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தின் மாடியில் செயல்பட்டு வருகிறது. மாடிக்குச் செல்லும் வழி மரத்தினால் செய்யப்பட்ட படிக்கட்டாக உள்ளது. குறிப்பாக, ஒருவர் ஏறி செல்லும் போது மற்றவர்கள் இறங்க முடியாத அளவுக்குக் குறுகலானதாகும். அதேபோல, இடைநிலைக் கல்வித் திட்ட அலுவலகமும் மாடியில் அமைந்துள்ளது. இந்த அலுவலகங்களுக்கு மாற்றுப்பாதை இல்லாததால் அனைவரும் ஒரே படிக்கட்டு வழியைத்தான் பயன்படுத்த வேண்டும். இங்கு நாள்தோறும் ஆசிரியர்கள், பொதுமக்கள், மாணவர்கள் என சுமார் 200 முதல் 300 பேர் வரை வந்து செல்கின்றனர்.
 இந்த அலுவலகத்துக்கு மாற்றுத் திறனாளிகள் எளிதில் வந்து செல்ல முடியாத நிலை உள்ளது. செங்குந்தாக அமைந்துள்ள படிக்கட்டில் கால் ஊனமுற்றவர்களால் எளிதில் ஏற முடியாது.
 எனவே, மாற்றுத் திறனாளிகளும் எளிதாக வந்து செல்லும்படி பாதை அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.
 இதுகுறித்து தமிழ்நாடு அனைத்துத் துறை மாற்றுத் திறனாளிகள் - பாதுகாப்பு உரிமைக்கான சங்க மாநிலச் செயலர் ஜானகிராஜா கூறியதாவது: மாற்றுத் திறனாளிகளுக்கு அரசுப் பணிகளில் 4 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.
 எனவே, அவர்கள் எளிமையாகப் பணியாற்றும் சூழலை அரசு அலுவலகங்களில் ஏற்படுத்தித் தர வேண்டுமென மத்திய அரசு மாற்றுத் திறனாளிகளுக்கான புதிய உரிமைகள் சட்டத்தை 2016-இல் இயற்றியது. அதன்படி, 2 ஆண்டுகளில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் மாற்றுத் திறனாளிகளுக்கான தடையற்ற சூழலை உருவாக்க வேண்டுமென அந்தச் சட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. அதனடிப்படையில், கடலூர் முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தையும் மாற்றுத் திறனாளிகள் எளிதில் வந்து செல்லும் விதத்தில் மாற்றி அமைக்க வேண்டும் என்றார் அவர்.
 இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கா.பழனிச்சாமி கூறியதாவது: தற்போது செயல்பட்டு வரும் முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம் பழங்காலத்து கட்டடமாகும். மாற்றுத் திறனாளிகள் யாராவது அலுவலரை சந்திக்க வேண்டியிருந்தால் அது தொடர்பாக முன்கூட்டியே தகவல் தெரிவித்தால், அலுவலர்கள் கீழே வந்து மனுக்களைப் பெற்று தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். நிரந்தரத் தீர்வாக மின்தூக்கி அமைப்பதற்கு அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.