பள்ளிக்கு வராமலேயே ஊதியம் பெறும் ஆசிரியை! பெற்றோர்கள் தர்னா
பள்ளிக்கு வராமலேயே ஊதியம் பெறும் ஆசிரியரால் மாணவர்களின் கல்வித் தரம் பாழாகியுள்ளதாகக் கூறி, பெற்றோர்கள் பள்ளியைப் பூட்டி புதன்கிழமை தர்னாவில் ஈடுபட்டனர்.


பள்ளிக்கு வராமலேயே ஊதியம் பெறும் ஆசிரியரால் மாணவர்களின் கல்வித் தரம் பாழாகியுள்ளதாகக் கூறி, பெற்றோர்கள் பள்ளியைப் பூட்டி புதன்கிழமை தர்னாவில் ஈடுபட்டனர்.
கடலூர் மாவட்டம், பண்ருட்டி ஒன்றியம், வேலங்குப்பம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை 25 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இரண்டு ஆசிரியர்கள் பணிபுரிய வேண்டிய இடத்தில், தலைமையாசிரியையாக ஹைசிந்த் மட்டுமே பணியாற்றி வருகிறார். மற்றொரு ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த 19 மாதங்களாக தினமும் மாற்றுப் பணி மூலம் பிற பள்ளி ஆசிரியர்கள் வந்து மாணவர்களுக்கு பாடம் நடத்தி வந்துள்ளனர்.
இதனால், சந்தேகமடைந்த கிராம மக்கள் இதுகுறித்து விசாரித்ததில், எம்.கே.லட்சுமி என்ற ஆசிரியை பள்ளிக்கு வராமலேயே சென்னையில் இருந்து கொண்டு ஊதியம் பெற்று வருவதும், அவரது பணியிடத்தைக் காலிப் பணியிடம் எனக் குறிப்பிட்டு, மாற்றுப் பணி மூலம் பல்வேறு ஆசிரியர்களை அனுப்பி மாணவர்களுக்கு பாடம் நடத்தி வருவதும் தெரிய வந்ததாம். இதனால், கிராம மக்களும், பெற்றோர்களும் பள்ளியைப் பூட்டி தர்னாவில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த பண்ருட்டி வட்டார உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் திலகம், காடாம்புலியூர் போலீஸார் அங்கு வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, ஆசிரியர்கள் முறையாக பள்ளிக்கு வராததால் குழந்தைகளின் கல்வித் தரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பள்ளிக்கென ஆசிரியர் ஒருவரை நிரந்தரமாகப் பணியமர்த்த வேண்டும் எனவும் கிராம மக்கள் வலியுறுத்தினர்.
இதுகுறித்து பள்ளித் தலைமையாசிரியை ஹைசிந்த் கூறியதாவது:
2016-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் ரவீந்திரன் என்ற ஆசிரியர் இந்தப் பள்ளியில் இருந்து பணியிடமாறுதலில் சென்றார். அதன் பின்னர், காலிப் பணியிடம் என எழுதி வருகிறேன். அதிகாரிகள் மாற்றுப் பணி மூலம் நாள்தோறும் வெவ்வேறு பள்ளிகளில் இருந்து ஆசிரியர்களை அனுப்பி வருகின்றனர். வேறு எதுவும் எனக்குத் தெரியாது என்றார் அவர்.
இதுதொடர்பாக ஆசிரியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
பண்ருட்டி ஒன்றியம், பாவைக்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் எம்.கே.லட்சுமி என்பவர் பணியமர்த்தப்பட்டார். ஆனால், அவர் பள்ளிக்கு வருகை தரவில்லை.
வேலங்குப்பம் பள்ளி ஆசிரியர் ரவீந்திரன் மாறுதலுக்குப் பின்னர், அந்த இடத்தில் எம்.கே.லட்சுமி மாற்றப்பட்டார். இதற்கான பணியிட மாறுதல் ஆணை, பண்ருட்டி உதவித் தொடக்கக் கல்வி அலுவலரிடத்தில் உள்ள நிலையில், வருகைப் பதிவேட்டில் மட்டும் காலிப் பணியிடம் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
வேறு பள்ளியில் இருந்து மாற்றுப் பணி மூலம் ஆசிரியர்களை அனுப்பி மாணவர்களுக்குப் பாடம் நடத்தி வருகின்றனர். ஆனால், எம்.கே.லட்சுமியின் பெயர் பாவைக்குளம் பள்ளியிலும் இல்லை. அவர், எங்கு பணியாற்றுகிறார் என்ற விவரமும் தெரியவில்லை. ஆனால், பாவைக்குளம் பள்ளி மூலம் ஊதியம் மட்டும் பெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
மாநில, மாவட்டக் கல்வி அதிகாரிகளின் உதவியுடன் கடந்த 3 ஆண்டுகளாக அரசை ஏமாற்றி, அவர் சம்பளம் பெற்று வருகிறார். இதனால், மாணவர்களின் கல்வித் தரம் பாழாகியுள்ளது.
இந்தச் செயலுக்கு உடந்தையாக இருப்பவர்கள் மீது உரிய விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
இதுகுறித்து பண்ருட்டி உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் திலகத்திடம் கேட்டபோது, "சென்னை தொடக்கக் கல்வி இயக்ககத்தில் பணியாற்றும் உயரதிகாரி ஒருவரின் உறவினர் என்ற முறையில், அவரின் நிர்பந்தம் காரணமாக நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...