தனியார் பால் நிறுவனத்திடமிருந்து நிலுவைத் தொகையைப் பெற்றுத் தர வலியுறுத்தி, பால் உற்பத்தியாளர்கள், முகவர்கள் மக்கள் பாதுகாப்பு கவசத்தினருடன் இணைந்து புதுப்பேட்டை கடை வீதி பேருந்து நிறுத்தம் அருகே புதன்கிழமை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள பைத்தாம்பாடியில் தனியார் பால் குளிரூட்டும் நிலையம் இயங்கி வந்தது. இந்த நிலையத்துக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்களிடமிருந்து, 70-க்கும் மேற்பட்ட முகவர்கள் பாலைப் பெற்று வழங்கி வந்தனர். கடந்த 2016 ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் 2017 மார்ச் மாதம் மூடப்பட்டது. இதனால், பால் உற்பத்தியாளர்களுக்குச் சேர வேண்டிய நிலுவைத் தொகை
ரூ. 32 லட்சம் இதுநாள் வரையில் வழங்கப்படவில்லை. இதுதொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடந்தும் பலன் ஏதுமில்லை.
எனவே, பாதிக்கப்பட்ட பால் உற்பத்தியாளர்கள், முகவர்கள் மக்கள் பாதுகாப்புக் கவசத்தினருடன் இணைந்து புதுப்பேட்டை கடை வீதி பேருந்து நிறுத்தத்தில் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
மக்கள் பாதுகாப்பு கவசத்தின் மாவட்ட அமைப்புக் குழுத் தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். மாவட்ட அமைப்பாளர் சேதுராஜன், அமைப்புக் குழுவைச் சேர்ந்த மணிவண்ணன், ராஜா, பால் முகவர்கள் பாவாடை, குணசேகரன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
அப்போது, பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்க வேண்டிய பாக்கித் தொகை ரூ. 32 லட்சத்தை வழங்காமல், மோசடி செய்த தனியார் பால் குளிரூட்டும் நிறுவனத்தின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பாக்கித் தொகையைப் பெற்றுத் தர மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.