ஆட்சியரகத்தில் வீணாகும் மரக் கன்றுகள்

கடலூர் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் நடுவதற்காகப் பெறப்பட்ட மரக் கன்றுகள் வீணாகி வருகின்றன.
Updated on
1 min read

கடலூர் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் நடுவதற்காகப் பெறப்பட்ட மரக் கன்றுகள் வீணாகி வருகின்றன.
கடலூர் மாவட்டத்தை பசுமையாக மாற்றும் வகையில் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து, "பசுமைக் கடலூர்' என்ற இயக்கத்தை மாவட்ட நிர்வாகம் செயல்படுத்தி வந்தது. 
இதன்மூலம் மரக் கன்றுகள் வரவழைக்கப்பட்டு, சுற்றுச்சுவர் கொண்ட அரசு அலுவலகங்கள், வணிக வளாகங்கள், குடியிருப்புகளில் அவற்றை நடுவது, அடுத்தகட்டமாக குடியிருப்போர் நலச் சங்கங்கள் மூலமாக குடியிருப்புப் பகுதிகளில் மரக் கன்றுகளை நடுவதை இலக்காகக் கொண்டு மாவட்ட நிர்வாகம் இயங்கி வந்தது. 
இதற்காக, மரக்கன்றுகள் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வாங்கி வரப்பட்டு, அவை நகரில் ஆங்காங்கே நடப்பட்டன. ஆனால், அவைகளில் பெரும்பாலான மரக்கன்றுகள் போதிய பராமரிப்பில்லாமல் கருகிய நிலையில் உள்ளன.
இந்த நிலையில், கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடுவதற்காகக் கொண்டு வரப்பட்ட சுமார் 25 மரக்கன்றுகள் எந்தப் பகுதியிலும் நடப்படாமல் ஓரமாகக் குவித்து வைக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த மரக் கன்றுகள் அங்குள்ள சூழலை ஏற்று பசுமையாக வளர்ந்து வருகின்றன. பிளாஸ்டிக் பையில் வைக்கப்பட்டுள்ள இந்த மரக் கன்றுகளின் வேர்கள் தற்போது அந்தப் பைகளிலிருந்து வெளியேறி மண்ணில் ஊன்றியுள்ளன. 
எனவே, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காலியாக உள்ள பல ஏக்கர் நிலத்தில் இந்த மரக் கன்றுகளை நட்டு தொடர்ந்து பராமரிக்க வேண்டுமென இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com